அசோகமித்திரன்

வண்ணதாசன் ஒரு புத்தக முன்னுரையில் தன்  எழுத்தைக் குறித்து சொல்லும்போது சன்னமான குரலில் வாதாடுவதைப் போல என்று விவரித்திருப்பார்.இந்த சன்னமான குரலில் என்ற வார்த்தைகள் நான் எப்போது  முதன்முதலில் அசோகமித்திரனைப் பார்த்தேனோ அப்போதிலிருந்து எனக்கு எப்போதும் அசோகமித்திரனையே நினைவூட்டும். அதற்கு முன் அவ்வளவு சன்னமான ஒரு குரலை நான் யாரிடமும் கேட்டதில்லை அசோகமித்திரனை  நான் முதன் முதலில் சந்தித்து ஒரு 25 வருடங்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.அலுவலக நண்பர்களில் இலக்கிய ஆர்வம் மிக்கவர்கள் ஒன்று சேர்ந்து மாதம் ஒரு முறை யாராவது எழுத்தாளரை அழைத்து ஒரு informal சந்திப்பு ஒன்றை நடத்திவந்தோம். அதில் நாங்கள் அழைத்த முதல் எழுத்தாளர் அசோக மித்திரன்.மெலிந்த உருவம் அதைவிட மெலிந்த குரல்.ஆனால் குறும்பும் கூர்மையும் கொப்பளிக்கும் பேச்சு. அப்போது express இதழிலா அல்லது hindu விலா  என்று நினைவில்லை, அவரது குருவிக்கூடு சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு வந்திருந்தது.பரவலான கவனமும் பெற்றிருந்தது.பேச்சு அதைச் சுற்றியே ஆரம்பித்தது.எங்களின்  பாராட்டுகளை மிகவும் கூச்சத்துடன் மறுதலித்துக் கொண்டே இருந்தார்.நாங்கள் அந்த கதையின் உண்மையான அர்த்தம் என்று  நாங்கள்  நினைத்ததை எல்லாம் சொல்லச்சொல்ல அதையெல்லாம் மறுத்துக்கொண்டே அது ஒரு சாதாரண சம்பவம் என்னமோ எல்லோருக்கும் பிடித்துவிட்டது என்ற ரீதியிலேயே பேசினார்.ஒரு கட்டத்தில் அவரது understated பதில்களில் பொறுமையிழந்து ஒரு நண்பர், எழுத்து என்பது ஆன்மீகமானத் தேடல் அல்லவா? என்று உணர்ச்சியுடன் கேட்டார்.சற்றே அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்த அ .மி .எனக்கு….இந்தத ஆன்மீகம் ,தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம், பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்டையே  ரொம்ப காலமா தேடிண்டிருக்கென்அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல. இதுல ஆன்மிகமெல்லாம் எப்படி தேடறது என்று சிரிக்காமல் சொன்னார். கேள்வி கேட்ட நண்பர் உட்பட அனைவரும் வெடித்துச் சிரித்தோம்..

 அவரது கூச்சத்தையும் அடக்கத்தையும் அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை தடுக்கும் ஒரு கவசமாகவே அவர் பயன்படுத்தி வருகிறாரோ என்று சந்தேகம் வந்தது .ஆனால் நேரம் செல்லச் செல்ல  வெகு இயல்பாக பேச ஆரம்பித்தார்.அப்போது வெளியாகியிருந்த காலமும் ஐந்து குழந்தைகளும் சிறுகதைக்கான் எங்கள் பாராட்டுகளை தன கூச்சத்தை சற்றே களைந்து புன்னகையுடன் ஏற்றுகொண்டார்.பிறகு அவரை ஆட்டோ ஏற்றிவிட்டுவிட்டு திரும்பிய போது  மிக நெருக்கமான ஒரு மாமாவையொ பெரியப்பாவையோ  சந்தித்து பிரிந்த உணர்வு எங்கள் அனைவருக்கும்.
அதன்பிறகு அவரை அவ்வளவு நெருக்கத்தில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் அவர் சாஹித்ய அகடெமி விருது பெற்றதைத் தொடர்ந்து கோவை விஜயா  வேலாயுதம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பாராட்டு விழாவில் அவரின் உரையை கேட்டேன்.பேசிய அனைவருமே அவருக்கு மிகத் தாமதமாக அந்த விருது கிடைத்ததற்கும் தகுதி இல்லாத பலருக்கு அவ்விருது அளிக்கப் பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துப் பேசினர். அ மி. தன ஏற்புரையில் பேசியது  எனக்கு முழுமையாக நினைவில்லை.சுருக்கமாகத் தான் பேசினார் வழக்கமான  அவரது மெல்லிய குரலில் சொன்ன  2 விஷயங்கள் நினைவில் உள்ளன.”பாருங்கோ…. வருஷா வருஷம் ஒரு பரிசை யாருக்காவது கொடுத்தே ஆகணும் அப்படின்னா யாருக்காவது கொடுத்துண்டு தான் இருப்பா அதுக்கெல்லாம் நாம கோபப்பட்டு பிரயோஜனமில்லை”என்றார்.பிறகு  யார் பேசியதற்கோ  பதில் சொல்லும் வகையில் இந்தக் கூச்சம்னு ஒரு விஷயம் இருக்கு பாருங்கோ அது மனுஷாகிட்ட  இருக்கிற வரைக்கும் உலகம் ரொம்ப மோசமா போயிடாதுன்னுதான் நினைக்கிறேன்.எவ்வளவு தப்புப் பண்ணினாலும்  அதை பெருமையா வெளில சொல்லிக்காம இருக்கறதுக்கும், நெறையப் பேருக்கு, சபலம் இருந்தாலும் ஒரு தப்பப் பண்ண விடாம  ஒரு கூச்சம் தடுக்கரதில்லயா அது இருக்கறவரைக்கும்  நமக்கு மனுஷா மேல இருக்கற நம்பிக்கைய விட்டுற வேண்டியதில்ல என்றார்.அதன் பிறகு இன்று வரை அவரை நான் நேரில் பார்க்கவில்லை.
 என்னை துவக்கத்தில்  அசோகமித்திரனின் எழுத்துக்களின் பால் ஈர்த்த விஷயங்களில் முக்கியமானது கிரிக்கெட்.நான் முதன் முதலில்  படித்த அவரது கதைகளில் ஒன்று நாளை மட்டும் என்ற சிறுகதை.jolly rovers அணியினரின் ஆட்டத்தை பார்க்க விரும்பும்  ஒரு கீழ்மத்யதர வர்க்கத்தை சேர்ந்த ஒரு சிறுவனின்  கதை. படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு மளிகைக் கடையிலோ பாத்திரக்கடயிலொ தன தந்தையால் வேலைக்குச் சேர அழைத்து செல்லப்படும் ஒரு கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வமுள்ள பையனின் கதை. வேலைக்கு சேர்ந்தபின் அவன் நினைத்துக்கொள்கிறான்.” அந்த கடை முதலாளியை பார்த்தால் கிரிகெட் பார்ப்பவராக தெரியவில்லை, நாளை ஒரு நாள் மட்டும் jolly Rovers அணியின் ஆட்டத்தை பார்க்க அனுமதிப்பாரா  என்று கேட்க வேண்டும் என்று”.கிட்டத்தட்ட அந்த வாலிபனின் வயதிலேயே இருந்த எனக்கு அந்த வாலிபனின் மறுக்கப்படும் இளமை ஆசைகள் மனதை பிசைந்தது.
பதினெட்டாவது அட்சக்கோடு நாவலிலும் கிரிகெட் விளையாட்டு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.அப்படி ஆரம்பித்து அ மியின் எழுத்துக்களில் என் மனதை பறிகொடுத்தேன். கரைந்த  நிழல்கள், மானசரோவர், தண்ணீர், ஆகாயத் தாமரை போன்ற நாவல்கள் பிரயாணம் இன்று விடுதலை மாலதி, போன்ற குறுநாவல்கள், கடன், புலிக்கலைஞன் ,காந்தி,பிப்லப் சொவ்துரிக்கு ஒரு கடன் மனு,விமோசனம் ,காலமும் ஐந் து குழந்தைகளும், மாறுதல் ,அப்பாவின் சிநேகிதர், ரிஷ்கா,போன்ற இன்னும் பெயர் மறந்த, நினைவிலிருக்கும் எண்ணற்ற சிறுகதைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.ஒற்றன் போன்ற ஒரு நாவலா கட்டுரையா என்று எளிதில் தீர்மானிக்க முடியாத எழுத்துவகைகளும் அதில் அடக்கம்.
அசோக மித்திரனின் புனைவுகள் குறித்து நிறையப் பேசி ஆகிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது, மாறாக அசோகமித்திரன் எனும் அற்புதமான கட்டுரையாளர் குறித்து மிகக் குறைவாகவே பேசப்பட்டு உள்ளது. பல்வேறு விஷயங்களை பல் வேறு கோணங்களில் அலசும் அவரது கட்டுரைகளை படிக்கும் போது புனைவுகளை முழுமையாக ஒதுக்கி விட்டு பார்த்தாலே கூட தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன் என்று கண்டுகொள்ளலாம்.அன்றாட வாழ்க்கையைக் குறித்தும் சினிமா குறித்தும் தான் நேரில் பழகிய மனிதர்கள் குறித்தும் அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையுமே ஒரு புதையல் இரு சோறு பதமாக அவரது காலக்கண்ணாடி மற்றும் முழுக்க முழுக்க சினிமா குறித்த கட்டுரைகள் அடங்கிய இருட்டிலிருந்து வெளிச்சம் ஆகிய இரு தொகுப்புகளை படித்தாலே அவரது அபுனைவு எழுத்துக்களின் வலிமையை உணரலாம்.
தன் சக எழுத்தாளர்களான ஆதவனுக்கும் ஜானகிராமனுக்கும் அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரைகள் அந்த வகை கட்டுரைகளின் முதல் வரிசையில் வைக்கத்தக்கவை.சினிமாவைக் குறித்து அவர் எழுதியுள்ள ஏராளமான கட்டுரைகளில் ஜெமினி வாசன் குறித்த கட்டுரைகளும், தமிழகப் பெண்களின் சினிமா  ரசனை குறித்து மௌன ராகம் படத்தை முன்வைத்து அவர் எழுதிய வந்தனை நிந்தனை சிந்தனை என்ற கட்டுரையும் தமிழ் சினிமாவை விமர்சிப்பது என்பது ஏன் மிக மிக சங்கடமானது என்று பேசும் ஒரு கட்டுரையும் சிகந்தராபாத் வாழ்க்கை குறித்த பல கட்டுரைகளும் எப்போது எத்தனை முறை படித்தாலும் அலுக்காதவை.இப்போது சமீபத்தில் வந்த எவை இழப்புகள் என்ற கட்டுரைத் தொகுதியில் கூட,பல சிறந்த கட்டுரைகள் உள்ளன. அதிலேயே மிகச் சிறந்த ஒன்று இலக்கியத்திற்கும் ஆன்மிகத்துக்கும்,இடையே உள்ள அல்லது இல்லாத உறவைப் பற்றிய  ஆட்கொண்டவர் என்ற  ஒரு கட்டுரை.கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகச் சிறந்த ஒன்று என்று கூறலாம்., ஒரு முழு நேர இலக்கியவாதியாகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வந்தாலும் ஆன்மிகத் தளத்தில் உயர் நிலையை அடைய இலக்கியம் என்ற சாதனம் போதுமா என்ற ஆழமான சந்தேகம் அவரிடம் உள்ளதை காட்டும் கட்டுரை இது.
அசோகமித்திரனின் நேர்காணல்களில் அவர் பதில் அளிக்கும் விதத்தில் இருந்தே அவர் பேட்டி எடுப்பவருக்குக் கொடுக்கும் மரியாதையை நாம் கணித்துவிடலாம். அவர் அளித்த பேட்டிகளிலேயே சிறந்ததாக நான் கருதுவது சொல்புதிது இதழுக்கு அவர் அளித்த பேட்டியை.இந்தப் பேட்டியில்தான் தான் உறுதியாக நம்பிய சில விஷயங்களையும், எழுத்தில் பிரக்ஞயயின் பங்கு குறித்தும் மிக அழகாக பேசியிருப்பார்.அவர் தன் சிறுவயதிலேயே தன்  ஆப்த வாக்கியமாக கண்டு கொண்டேன் என்று ஒரு வாக்கியத்தை கூறுகிறார்.அது The  futility of gratification of desire  என்பதாகும்.இந்த வாக்கியத்தின் தாக்கத்தை அவர் எழுதிய பல கதைகளில் பார்க்கலாம்.அந்தப் பேட்டியிலேயே இலக்கியம் என்பதை வாழ்வின் குறைப்பட்ட வடிவமாகவே தான் பார்ப்பதாகக் கூறுகிறார்.
சமீபத்தில் காலத்தின் கருணையற்ற முன்நகர்வுக்கு சாட்சி போல, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கோடு அவர்  வந்திருந்த ஒரு புகைப்படம் நெஞ்சை சற்றே அசைத்துவிட்டது.
 .
அந்த படத்தை பார்த்த அதே சமயம் பல ஆண்டுகளுக்கு முன் அவர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தி.நகரில் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த நினைவு நெஞ்சில் மோதியது.அதே சமயம் தி இந்து  தமிழ் நாளிதழ் வெளியிட்டிருந்த 2014ம் ஆண்டு பொங்கல் மலரில் வைரம் என்ற அவரது சிறுகதையைப் படித்தது ஆசுவாசம் அளித்தது..
       சொல்வனம் 100வது இதழ்  அசோகமித்திரன் சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் இடம்பெற்ற கட்டுரை.

சொல்லுங்க!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s