விருட்சத்தின் முதல் தளிர் – குகாவின் “காந்தி – இந்தியாவுக்கு முன்னால்” நூலை முன்வைத்து

  “”நீங்கள் ஒரு வழக்குரைஞரை எங்களுக்கு அனுப்பினீர்கள் ஆனால் நாங்கள் உங்களுக்குத் திருப்பி அளித்ததோ ஒரு மகாத்மாவை.”இது ராமச்சந்திர குஹாவின் தென்னாப்பிரிக்க நண்பர் ஒருவர் அவருக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய வாசகம். இந்த வாக்கியமே ராமச்சந்திரா குஹாவின் சமீபத்திய நூலான “இந்தியாவுக்கு முன்பான காந்தி” (Gandhi  Before  India ) நூலின் சாராம்சமாகும்.

இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா, காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இரு பாகங்களாக எழுதப் போவதாக ஒரு அறிவிப்பு வந்தவுடனேயே மிகுந்த ஆவலுடன் அவற்றை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். காரணங்கள் இரண்டு- ஒன்று, தன்னை ஒரு நேருவியர் ( Nehruvian)  என்று அழைத்துக் கொள்ளும் குஹாவின்  இந்தியா குறித்தான பார்வை எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. எப்பொழுதுமே ஓங்கி ஒலிக்காத நிதானமான, நியாயமான குரல் என்றே அவரது எழுத்தை நான் கண்டுவந்திருக்கிறேன். இரண்டாவதும் மிக முக்கியமானதுமான காரணம், மகாத்மா காந்தி படித்துத் தீராத, படிக்கப்படிக்க அலுக்காத இந்தியாவின், ஏன், உலக அற்புதங்களில் ஒன்று – மகாபாரதத்தைப் போல், கடந்த ஒரு மாதமாக புத்தக வடிவில் காந்தியையும் இணையத்தில் பாரதத்தையும் (ஜெயமோகனின் வெண் முரசு), இணையாகப் படித்து வந்தது ஒரு இனிமையான தற்செயல்.

குஹாவின் இந்தப் புத்தகம் காந்தியின் பிறப்பில் தொடங்கி அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவது வரை அவரது வாழ்வைச் சொல்வது. இதே பிப்ரவரி மாதம், சரியாக நூறு வருடங்களுக்கு முன்தான் (1914) காந்தி தன் தென்னாப்பிரிக்க வாசத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார்.

காந்தியின் சரிதத்தில் அதிகம் தெரிந்திராத, மறக்கப்பட்ட அவரது போர்பந்தர், மும்பை, ராஜ்கோட், லண்டன், டர்பன், மற்றும் ஜோஹன்னேஸ்பார்க் வாழ்க்கையை, அந்தக் காலகட்டத்தின் சமகால ஆவணங்களில் இருந்தே ஒரு மீள் உருவாக்கம் செய்கிறது இந்த நூல். காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும்போது அவரது வயது 45. அவரை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக, அரசியல் செயல்பாட்டாளாராக, மதச்சிந்தனையாளராக இந்த முதல் 45 வருட வாழ்வு எப்படி வடிவமைத்தது என்பதும், காந்தியை இந்திய விடுதலைப்  போராட்டத்தின் தலைவராக, ஒரு அஹிம்சைப் போராளியாக, சர்வமத சமரசவாதியாக அறிந்திருப்போருக்கு, அவரது தென்னாப்பிரிக்க வாசத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்தவும் இந்த நூல் உதவும்.

ஒரு ஆச்சார வைஷ்ணவ பனியா குடும்பத்தில் பிறந்த காந்தி, தன் ஜாதி ஆச்சாரங்களிலிருந்தும் பழமைவாதப் போக்கிலிருந்தும் எப்படி தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. ராஜ்கோட்டில் ஒரு இஸ்லாமிய மாணவரைத் தன் நெருங்கிய நண்பனாகவும்,.லண்டனில் சட்டக்கல்லூரி மாணவராக இருக்கையில் சைவ உணவு உட்கொள்ளும் ஒரு கிறிஸ்துவரை அறை  நண்பனாகவும்  கொண்டிருந்தாலும், சகல சமயங்களையும் ஒன்றாக நோக்கும் ஒரு சர்வ மதச் சிந்தனையாளராகவும் அவரை மாற்றியது அவரது தென்னாப்பிரிக்க  வாழ்க்கையே. ஒரு முஸ்லிம் வணிகரால் வேலைக்கு அமர்த்தப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் காந்தி, அங்கு யூதர்களையும், கிருஸ்துவர்களையும், பார்சீக்களையும் தன்  நெருங்கிய நண்பர்களாகக் கொள்கிறார். பிறப்பால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவர், அங்குதான் கூலித் தொழிலாளர்களுடனும் நடைபாதை வணிகர்களுடனும் தன்னை ஒருவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். மொழியால் குஜராத்தியான அவர், தென்னாப்பிரிக்காவில் மிகுந்திருந்த ஏழைக் கூலித் தமிழர்களிடம்  கொண்ட நெருக்கம் காரணமாக  மொழி என்னும் எல்லையையும் கடக்கிறார். நவீன காலகட்டத்தின் முற்போக்குச் சிந்தனைகளை டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் ஆகியோரின் நூல்கள் மூலம் அவர் அறியவந்ததும் தென்னாப்பிரிக்காவிலேதான்.

காந்தி தென்னாப்பிரிக்காவில் அடைந்த இந்த உலகளாவிய பெருநோக்கு, இந்தியாவில் அந்தக் காலகட்டத்தின் காங்கிரஸ் தலைவர்களோடு ஒப்பிடும்போது மிக முற்போக்கானதாகும். இந்திய காங்கிரசில் அப்போது வங்காளிகளும் மராட்டியர்களுமே ஆதிக்கம் செலுத்திவந்தனர். மிகப் பெரும்பாலும் உயர்சாதி, உயர் நடுத்தர வகுப்பினரே அதன் அங்கத்தினர்கள். பெண்களின் பங்களிப்பும் இஸ்லாமியரும் அறவே இல்லை என்று கூறலாம். காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்களில் குஜராத்தி முஸ்லிம்களும் தமிழ் கூலித் தொழிலாளிகளும் யூதர்களும் பதான்களும் பல்வேறு கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் மிகத் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். முக்கியமாக, இந்தப் போராட்டங்களில் பெண்களின் பங்கும் மிக அதிகம்.

இது விஷயமாகப் பேசும்போது, காந்தியின் சந்நிதானத்தில் குறுகிய மொழி இன உணர்வுகளுக்கு இடமேயில்லை என்றாலும் இதிலிருந்தெல்லாம் இன்னும் நம்மால் விடுபடமுடியவில்லை என்ற உண்மையை நம் தமிழுணர்வோடு நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் காந்தியோடு தென்னாப்பிரிக்காவில் தோளோடு தோள் நின்று போராடிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழை தமிழர்கள் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. பல இடங்களில் காந்தி தமிழர்களையே  ஏனைய இந்திய சமூகத்தினருக்கு உதாரணமாகக் காட்டி பேசுகிறார். காந்தி இறுதியாக தென்னாப்பிரக்காவிலிருந்து விடைபெரும்பொழுது ஜொஹன்னெஸ்பர்கில் நடந்த  பிரிவுபசார விழாவிலே தனது போராட்டத்தில் பங்கு கொண்டு உயிர் துறந்த  நாகப்பன், நாராயணசாமி மற்றும் வள்ளியம்மை என்ற மூன்று தமிழர்களை மட்டுமே  பெயர் சொல்லிக் குறிப்பிட்டுப் பேசுகிறார் காந்தி. அதிலும்  16 வயதே நிரம்பிய வள்ளியம்மையின்  முகம் தன்  கண்ணெதிரே  நேரில் வந்து நிற்பதாக மனம் நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.

இதைப் படிக்கும்போது 2006ல் அலுவலகப் பணி நிமித்தம் தரங்கம்பாடி சார்நிலைக் கருவூலத்திற்கு தணிக்கைக்காகப் போயிருந்தது நினைவுக்கு வந்தது. அந்த அலுவலகம் தரங்கம்பாடியில் இல்லாமல் அருகே பொறையார் என்ற ஊரில் இருந்தது. அந்தச் சிற்றூரில் ஒரு வீடு மற்ற வீடுகளைக் காட்டிலும் சுத்தமாகவும் தனித்து தெரியும்படியும் இருந்தது. அருகே சென்று பார்த்தபோது காந்தி தங்கிய வீடு என்ற தகவலுடன் ஒரு பலகை இருந்தது. இங்கு காந்தி வந்திருந்தாரா என்று வியப்புடன் கேட்டபோதுதான். தென்னாப்பிரிக்காவில் உயிர் துறந்த வள்ளியம்மையின் ஊர் தில்லையாடி மிக அருகில் உள்ளதாகவும் வள்ளியம்மையின் நினைவு மண்டபம் திறக்க காந்தி வந்திருந்தபோது இந்த வீட்டில்தான் தங்கினார் என்றும் ஒரு பெரியவர் கூறினார். அன்று ஏற்பட்ட சிலிர்ப்பு மீண்டும் இந்த நூலில் தில்லையாடி வள்ளியம்மையின் பெயரை காந்தி குறிப்பிடுவதைப்  படித்தபோது  ஏற்பட்டது.

அவரது வீட்டினைப் பகிர்ந்து கொண்ட அவரது நெருங்கிய நட்பு வட்டத்தினரின்  பின்னணி பிரமிப்பூட்டும்  ஒன்று. அவரது மிக நெருங்கிய நண்பர்களில் ஹென்றி போலக்கும் ஹெர்மன் காலன்பக்கும் முறையே ஆங்கிலேய மற்றும் ஜெர்மானிய  யூதர்கள். ஜோசெப் டோக்  ஒரு பாப்டிஸ கிறிஸ்துவர். அவரது செயலாளர்களில் வின்சென்ட் லாரென்ஸ் ஒரு தமிழர். சோன்யா ஷெல்சின் (பெண்)  ஒரு லித்துவானிய யூதர். காந்தியின் வலது கரமென்றும் போர்ப்படைத் தளபதி என்றும் வர்ணிக்கப்பட்ட தம்பி நாயுடு ஒரு  மொரிஷியஸ் தமிழர். காந்தியின் போராட்டங்களில் லிங் க்வின்  என்பவரது தலைமையில் சீனத் தொழிலாளர்களும் பங்கு கொண்டனர் என்பது அதிகம் அறியப்படாத அபூர்வச் செய்தியாகும். காந்தியின் போராட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அதிகம் நடந்த  இடம் ஹமிடியா மசூதி.

காந்தியின் வாழ்வில்  பெண்கள்  என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு அவரது தென்னாப்பிரிக்க வாழ்வில் அவரைச் சுற்றியிருந்த  பெண்களுக்கும் அவருக்குமான உறவு இதில் விவரிக்கப்பட்டுள்ளது. காந்தியின் தலைமையை பெண்கள் எந்தவிதமான தயக்கமுமின்றி முழு நம்பிக்கையுடன் ஏற்றனர். தங்கள் கணவர்களைச் சிறைக்கு அனுப்பிய பெண்கள் தாமும் சிறை செல்ல எந்த நேரமும் தயாராக இருந்தனர். அதற்கு காந்தியின் மீது அவர்களுக்கு இருந்த முழு நம்பிக்கையே காரணம். சோனியா செல்சின், மில்லி போலக், மௌட் போலக் (முறையே ஹென்றி பொலக்கின் மனைவி மற்றும் சகோதரியர்), வள்ளியம்மை, வீரம்மாள், தம்பி நாயுடுவின் மனைவி மற்றும் ஏராளமான பெண்கள் காந்தியிடம் எந்த தயக்கமுமின்றி பழகி அவர் தலைமையை ஏற்றனர். அவரால் ஏராளமான பெண்களை போராட்டத்தில்  ஈடுபடுத்த முடிந்தது. இது நடந்தது பெண்கள் வீட்டைவிட்டு வெளியே  வருவதே மிக அபூர்வமாக இருந்த 19ம் நூற்றாண்டு இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் முதல் சில வருடங்களிலுமாகும்.  இவர்களில் மௌட் போலக் காந்தி மீது கொண்டிருந்த அன்பைக் காதல் என்றே சொல்லலாம் என்கிறார் குஹா.

தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, அதன் பின் காந்தி இந்தியா திரும்பிய பின்னரும் பெண்களின் தொடர்ந்த ஆதரவு  காந்திக்கு இருந்து வந்ததற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நான் இந்த நூலுக்கு இணையாக படித்து வரும் ஜெயமோகனின் வெண் முரசில் விசித்திர வீரியனிடம் பார்த்த மாத்திரத்தில் மிக இணக்கம் கொள்ளும் அம்பிகை சொல்லும் காரணம் இங்கு நினைவுக்கு வருகிறது. அம்பிகை கூறுகிறாள். “நான் பார்த்த ஆண்களில் ஆண்  என்ற உணர்வே இல்லாத கண்கள் கொண்ட முதல் ஆண் அவன்தான்” என்று. காந்தியிடம் இருந்த கனிவு அப்படிப்பட்டது.

லண்டனில் இருக்கும்போது லண்டன் சைவ உணவு கழகப் பத்திரிகையில் பல  கட்டுரைகள் எழுதியிருந்தாலும் காந்தியை ஒரு முழு எழுத்தாளர் ஆக்கியது தென்னாப்பிரிக்காவில் அவர் வெளியிட்ட ‘இந்தியன் ஒப்பீனியன்’ ‘பத்திரிக்கையே ஆகும். துவக்ககாலத்தில்  குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளும்  அப்பத்திரிக்கையில்  இடம்பெற்றது.

காந்தியின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நிகழ்ச்சியாக நாம் அட்டென்பரோவின் திரைப்படம் மூலம் நன்கு  அறிந்த அந்த பீட்டர்மாறிட்ஸ்பர்க்  ரயில் நிலைய சம்பவத்தைக்காட்டிலும் டர்பன் நகரில் 1897ல் சில வெள்ளையர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிகழ்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் உண்டென்றும் இந்நிகழ்ச்சியே காந்தியின் போராட்ட குணத்தை மேலும் தீவிரமாக்கியது  என்றும் கூறுகிறார் குஹா.

காந்தியின் சத்யாக்ரக போர்முறை அவர் ஹென்றி டேவிட் தொரோவிடமிருந்து பெற்றுக் கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இந்நூல் அப்படியல்ல என்கிறது. சத்யாக்ரகப் போரைத் துவக்கியபோது காந்தி தோரோவை அறிந்திருக்கவில்லை என்றே ஆவணங்களின் சாட்சி மூலம் கூறுகிறார் குஹா. அதே போல் காந்திக்கு மகாத்மா என்ற பட்டம் தாகூர் 1920 வாக்கில் அளித்தது என்பதே பொதுவான தகவல். ஆனால் அதற்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் அவர் அப்படி அழைக்கப்பட்டிருந்தார் என்பதையும் இந்நூலில் காணலாம்.

காந்தியை ஒரு சமூக அரசியல் போராளியாக மாற்றிய இந்தத் தென்னாப்பிரிக்க வாழ்வு, மெல்ல மெல்ல அவர் தன் குடும்பத்தினரிடமிருந்து அன்னியப்பட்டதையும் காட்டுகிறது. ஒருமுறை அவரது மூத்த சகோதரர் பண உதவி கேட்டு எழுதிய கடிதத்திற்கு காந்தி அனுப்பிய பதில் கடிதத்தின் மூலம் காந்தியின் நேர்மை உணர்வும் சமூகக் கடமையும் எந்த அளவுக்கு அவர் சொந்த அண்ணனிடமிருந்துகூட அவரை விலக  வைத்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அண்ணனின் கோரிக்கையை மிகுந்த மரியாதையோடும், பணிவோடும் கறாராகவும் மென்மையாகவும், அவரது ஆடம்பரச் செலவுகளுக்கு தன்னால் பணம் அனுப்ப முடியாது  என்று மறுத்துவிடுகிறார் காந்தி. இதைவிட முக்கியமாக இந்நூல் காட்டுவது தன்  மனைவியையும் பிள்ளைகளையும் தன் போராட்ட வாழ்க்கைப் பாதைக்கு காந்தி மாற்றியதன் சித்திரம். இதில் காந்திக்கு எவ்வளவு வெற்றி உண்டோ அதே அளவுக்கு அவரது மனைவி கஸ்தூர்பாவுக்கும் உண்டு எனக் கூறுகிறார் குஹா.

காந்தி, பால கங்காதர திலகரின் வழியைத் தேர்ந்தெடுக்காமல் கோகலேவை தன் குருவாகக் கொண்டதும், நெருங்கியதும் ஒரு முக்கியமான நிகழ்வு என்கிறார் குஹா. திலகர் வழியில் காந்தி சென்றிருப்பாரேயானால் இந்தியாவின் சுதந்திரப் போர்  முழுக்க முழுக்க ஒரு வலதுசாரிப் போராட்டம் ஆகியிருக்கக்கூடும். ஆனால் கோகலேயுடனான நெருக்கமே காந்தியின் பார்வைக்கு ஒரு அரவணைக்கும் தன்மை அளித்தது என்றும் கூறுகிறார் குஹா. கோகலே காந்தியின் கோரிக்கையை ஏற்று தென்னாப்பிரிக்கா வந்து காந்தியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததையும் இதில் காணலாம்.

காந்தி தென்னாப்பிரிக்க அரசுடன் மட்டுமின்றி தன் குடும்பத்துடனும் தன் நம்பிக்கைகளுடனும் போராடியபடியே இருந்திருக்கிறார், மூத்த  மகன் ஹரி லால் மட்டுமல்ல அடுத்த மகன் மணி லாலையும்  அவர் கடுமையாக தண்டிக்கவும் அவர் பொருட்டும் உண்ணா நோன்பு இருக்க வேண்டி வந்ததையும் விவரிக்கிறது  இந்நூல்.

காந்தியின் வாழ்க்கை முழுதும் அவரது மனதில் ஆறாத ரணமாக இருந்த அவரது மூத்த மகன் ஹரிலால் அவரிடமிருந்து அன்னியப்பட ஆரம்பிப்பதும் இந்தத் தென்னாப்பிரிக்க வாழ்வில்தான். ஹரிலாலும் சத்யாக்ரகப் போரில் கலந்துகொண்டு சிறை சென்றார் என்ற செய்தியே புதிதாக இருந்தது எனக்கு. லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற ஆசைப்படுகிறார் ஹரிலால். ஆனால் காந்தி அதை உறுதியாக மறுத்துவிடுகிறார். இந்த நிகழ்வே இருவருக்குமிடையே ஆழமானப் பிரிவை உண்டாக்குகிறது. இந்த நூலில் மிகப் பெரும்பாலும் உள்ளது உள்ளபடியும் தனது அபிப்ராயங்களை அதிகமாகச் சொல்லாமலுமே சொல்லி வரும் குஹா, இந்த ஒரு விஷயத்தில் மட்டும் காந்தி தன் மகனைப் புரிந்து கொள்ள முடியாமல் அதிகாரம் செலுத்துகிறார் என்றும், காந்தி தன் மகனுக்குச் சரியான நியாயம் வழங்கவில்லை என்றும் கூறுகிறார். இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. குஹாவின் கருத்து சரிதான் என்று என்னால் முழுமையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை.

தான் ஒரு கொள்கையை கடைபிடித்து, தலைமையேற்று நடத்தி வரும் போராட்டம்  முதலில் தன் குடும்பத்தில் மனமாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே காந்தியின் எதிர்பார்ப்பு. தன் குடும்பத்திற்கு உபதேசிக்காத எதையும் பிறருக்கு  உபதேசிக்க விரும்பாத காந்தியின் நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இது. ஆனால் அதற்கு ஒரு இளம் பிள்ளையின் நியாயமான ஆசைகள் பலியாவதா என்பது சங்கடம் தரும் கேள்விதான். ஆனால், ஜோதிடத்தையும் கடவுள் பக்தியையும் மூடநம்பிக்கைகள்  என்று ஊருக்கெல்லாம் பகுத்தறிவு உபதேசம் செய்துவிட்டு தன் குடும்பத்தினர் தனக்கு கோவில் கோவிலாகப் போய் பரிகார பூஜை செய்வதை அவர்களின் ஜனநாயக உரிமை என்று விளக்கும் தற்கால தலைவர்கள் போன்றவர் இல்லையே காந்தி..

காந்தியின் மகத்தான வாழ்வின் துவக்கத்தை விவரிக்கும் இந்த நூலைப் படித்தவுடன் இரு விஷயங்கள் முக்கியமாக என் மனதில் தோன்றின.. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடும் காந்திக்கு அந்த சமயத்தில் தன்      சொந்த நாட்டில்  தலித்துகளை ஜாதி ஹிந்துக்கள் நடத்தும் முறை குறித்து எந்த உறுத்தலும் இருந்ததாக இதில் பதிவுகள் இல்லை. அந்தப் பிரக்ஞை அவருக்குக் வருவதற்கு  அவர் இந்தியா திரும்பி இங்குள்ள போராட்டத்தின் தலைமை ஏற்கும்வரை  காத்திருக்க வேண்டியிருந்தது போலும். அதே போல வெள்ளையர்களும் இந்தியர்களும் தென்னாப்பிரிக்க மண்ணின் மைந்தர்களான காப்பிரிகளை (kaffir என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கருப்பர்களை) நடத்தும் அநீதியான விதம் குறித்த சிந்தனையும் கிட்டத்தட்ட அவர் தென்னாப்பிரிக்காவிருந்து கிளம்பும் சமயத்திலேயே அவருக்கு வருகிறது என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். ஒரு தலைவன் பிறப்பதில்லை, காலபோக்கில் பரிணமித்து வளர்ந்து உருவாகிறான், உருமாறுகிறான்.

India After Gandhi எழுதிய குகா, இப்போது Gandhi Before India என்று எழுதியிருப்பதில் ஒரு சீர்மை தெரிகிறது. ஆனால், காந்தி குறித்து குகா எழுத வேண்டிய விஷயங்கள் முழுமை பெற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது. காந்தி குறித்து  இன்னும் எழுத நிறைய இருக்கிறது. குஹாவின் India After Gandhi நூல் தமிழில் வந்தது போலவே அவசியம் தமிழாக்கப்பட வேண்டிய முக்கிய நூல் இது. இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது தமிழர்களாகிய நம் தேவை.

ஒரு தொழிலாகத் தன் நூலகத்தை நடத்திவந்தாலும், வெறும் பொழுதுபோக்குப் புத்தகங்கள் மட்டுமின்றி, இந்த நூலைப் போன்ற விலை மிகுந்த, தீவிர வாசிப்பைக் கோரும் நூல்களையும் ,குறைந்தபட்சம் ஒருவர் படிக்கச் சித்தமாக இருந்தாலே உடனுக்குடன் வாங்கி எனக்கும் நண்பர்களுக்கும் வாசிக்கப் பகிர்ந்தளித்த கோவை த்யாகு புக் சென்டெர்  அதிபர்  திரு தியாகு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றிகளைச் சொல்ல வேண்டும். அவரன்றி, இந்த நூலை இவ்வளவு விரைவில் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காது.

புகைப்பட உதவி – Flipkart