விட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்

இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே எழுதியிருக்க வேண்டிய கட்டுரை இது, சற்றே தாமதமாகிவிட்டது. எழுத வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்தாலும் தவிர்க்க முடியாத அலுவலக வேலைகளாலும் சொந்த வேலைகளாலும் தள்ளிப் போட்டு இப்போதுதான் எழுத முடிகிறது. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான், யாரைப்பற்றி எழுத நினைத்தேனோ அவரது இன்னொரு புத்தகத்தையும் படித்துவிட இந்த இரண்டு மாதங்களில் சாத்தியப்பட்டிருக்கிறது.

கோவையில் நண்பர்கள் ஆர். ஸ்ரீநிவாசன், எஸ். சூரிய நாராயணன், மற்றும் எஸ். சுரேஷ் குமார் ஆகிய மூவரும் சேர்ந்து அருவி என்றொரு பண்பாட்டு அமைப்பைக் கொண்டு ஒரூ மாதம் விட்டு ஒரு மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று கலை, இலக்கியம், இசை சார்ந்த ஆளுமைகளைக் கோவைக்கு அழைத்து வந்து அருமையான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இவர்கள் அழைத்து வந்த ஆளுமைகளில் சிலரைச் சொன்னால் நிகழ்சிகளின் தரம் புரியும் – தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பாலுசாமி, குடமாளூர் ஜனார்தனன், லலிதா ராம், வேலு சரவணன் ஆகியோர் அவர்களில் சிலர். இந்நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பம்சம், முக்கிய நிகழ்வு துவங்குவதற்கு முன் நண்பர் ஆனந்த் அவர்களின் கோவை கோணங்கள் திரைப்பட அமைப்பினர் திரையிடும் ஓவியம் மற்றும் இசை சம்பந்தப்பட்ட அற்புதமான ஆவணப்படங்கள்.

கோணங்கள் அமைப்பினரே ஒவ்வொரு மாதமும் இரண்டு ஞாயிற்று கிழமை மாலைகளில் மிகச் சிறந்த உலக திரைப்படங்களை திரையிட்டு வருகிறார்கள். அது தவிர களம், இலக்கிய சந்திப்பு எழுத்தாளர் பாமரன் அவர்கள் நடத்தும் நாய் வால் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து, இலக்கிய கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். தவிர ஜெயமோகனின் வாசகர்கள் நடத்தும் இலக்கிய அமைப்பான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் கோவையையே தலைமையிடமாக கொண்டு செயல்படுவது.அதனால் கோவையில் வாசிப்பதன் சுகத்தை மேலும் கூடடுவதாக இந்த இலக்கிய நடவடிக்கைகள் உள்ளன என்று சொல்லலாம்.

மேற்சொன்ன ஆளுமைகளின் வரிசையில் சென்ற ஏப்ரல் மாதம் வந்தவர் எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்கள். எழுத்தாளர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரும்கூட. எழுத்தாளர் என்ற ஒற்றைச் சொல்லில் அவரை அடையாளப்படுத்துவதும்கூட ஒரு வகையில் அவரைக் குறைத்துக் கூறுவதுதான். அவர் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, ஏராளமான சிறுகதைகள் மற்றும் தமிழின் முக்கியமான மூன்று நாவல்கள் தவிர, தமிழ் திரைப்பட வரலாற்று (விமர்சன) நூல் ஒன்றும் கன்னடத் திரைப்பட வரலாற்று நூல் ஒன்றும் எழுதியவர். இவை தவிர வரலாறும் அவர் ஆர்வம் அதிகம் கொண்டுள்ள ஒரு துறை. அதில் தமிழகத்தின் கோட்டைகள் குறித்து அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த தமிழகத்துக் கோட்டைகள் நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுவதற்கே அவர் கோவை வந்திருந்தார்.

விட்டல் ராவ் அவர்களின் நதி மூலம், போக்கிடம், மற்றும் காம்ரேடுகள் ஆகிய மூன்று நாவல்களும் சிறந்த தமிழ் நாவல்களின் வரிசையில் நிச்சயமாக இடம்பெற வேண்டியவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை.

நதிமூலம் அவரது தந்தையின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு குடும்ப வரலாற்று நாவல் என்றாலும், 20ம் நூற்றாண்டின் முதல் 40-50 வருடங்களின் வரலாற்று சித்திரமாக உள்ள நாவல். போக்கிடம் சேலம் அருகில் மங்கனீஸ் சுரங்கம் அமைவதற்காக காலி செய்யப்படும் டானிஷ்பெட் எனும் கிராமத்தின், அதன் மனிதர்களின் துயர் மிகுந்த கதை. புலம் பெயரும் மக்களின் துயரை மிகை உணர்ச்சி ஏதுமின்றி வெகு இயல்பாக மனதில் தைக்குமாறு எழுதப்பட்ட ஒன்று. இந்த நாவலை வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக் காட்டு இதிகாசம் நாவலுடன் ஒப்பிட்டு கள்ளிக் காட்டு இதிகாசத்தைவிட போக்கிடம் எப்படி ஒரு மேலான படைப்பு என்பதை ஜெயமோகன் தன் கட்டுரை ஒன்றில் விளக்கியிருக்கிறார்.

இந்த இரண்டையும் விட எனக்கு மிகவும் பிடித்தது அவரின் காம்ரேடுகள் நாவல். BSNL ஊழியரான விட்டல் ராவ் அவரது தொழிற்சங்க அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய இந்நாவல், படிக்கும் ஒவ்வொருவரது மனத்திலும் அரசு நிறுவனங்களில் தொழிற்சங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் தொழிற்சங்கங்களுக்கும் அதன் உறுப்பினர்களுக்குமான உறவு குறித்தும் ஆழமான கேள்விகளை எழுப்பும் வல்லமை கொண்டது. காம்ரேடுகள் நாவலின் நாயகன் போலவே மனம் சிதைந்த ஒரு நண்பர் எனக்கும் இருக்கிறார். பின்னாளில் ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் ஒரு precursor என்றும் இந்த நாவலை சொல்லலாம்.

விட்டல் ராவின் எழுத்தின் களமும் கூறு முறையும் அசோகமித்திரன் பாணியிலானது என்றாலும் தனித்துவமிக்கது. விட்டல் ராவை நேரில் சந்தித்திராத நான் அவரை அசோகமித்திரனின் பாணியிலேயே அடங்கிய தொனியில் மெல்லிய குரலில் பேசுபவராகவே கற்பனை செய்திருந்தேன். ஆனால் என்ன ஒரு இனிய ஆச்சரியம்! விட்டல் ராவ் கணீரென்ற குரலும் மிகக் கலகலப்பாகவும் பேசக்கூடிய தன்மையும் கொண்டவர் என்பதை அன்று கோவை நிகழ்ச்சியில்தான் கண்டு கொண்டேன். தவிர அவர் குரலைக் கேட்ட மாத்திரத்த்தில் நன்றாகப் பாடக் கூடியவர் என்றும் நினைத்தேன். அதுவும் சரியாகவே போயிற்று.

அன்று கோவை நிகழ்ச்சியில் இளவயதிலிருந்தே கோட்டைகளை ஆராய்வதில் தனக்கு ஆர்வம் உண்டானது எப்படி என்பதையும், தான் கண்டு வந்த கோட்டைகள் குறித்தும் மிகச் சரளமான ஒரு உரையை நிகழ்த்தினார். உடனே அந்த நூலைத்தான் படிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது கிடைக்க சற்றே தாமதமானதால் சமீபத்தில் வெளி வந்த இன்னொரு நூலான வாழ்வில் சில உன்னதங்களைப் படித்தேன்.

இந்த நூலை சென்னையின் பழையப் புத்தகக் கடைகளுக்கு ஓர் அஞ்சலி என்றே சொல்லலாம். கூடவே 50 களிலும் 60களிலும் வெளிவந்த ஆங்கில பத்திரிக்கைகள் குறித்த ஒரு retro கூட. நான் வேலைக்காக சென்னை சென்று சேர்ந்தது 1986. அதற்கு முன் வருடம்தான் சென்னை மூர் மார்கெட் எரிந்து போயிற்று. அதைப் பற்றி எவ்வளவோ நண்பர்கள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் விட்டல் ராவ் கொடுத்திருக்கும் விதம் போல எதுவும் அமைந்ததில்லை. மூர் மார்க்கெட்டின் பழைய புத்தகக் கடை மனிதர்கள் அப்படியே ரத்தமும் சதையுமாக நம் முன் வந்து உலவுகிறார்கள். அந்த இடம், அப்படியே உயிர்கொண்டு அதன் பழைய புத்தக வாசனையுடன் நம் முன் காட்சி அளிக்கிறது. அதன் மனிதர்களான முதலியார், ஐரே என்று அழைக்கப்படும் ஒருவர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக புத்தகங்களுக்குப் பேரம் பேசி வாங்கும் முறை என்று மறக்க முடியாத சித்திரங்கள். மூர் மார்க்கெட் எரிந்து போன பின் சித்தம் கலங்கிப் போன முதலியார், பெரும் இழப்புடன் எப்படியோ தப்பி பிழைத்து, பின் மைலாப்பூரில் இன்னொரு பழைய புத்தகக் கடை அரசரான ஆழ்வாரிடம் சற்றேறக் குறைய வேலையாள் போல இருக்கும் அந்த ஐரே ஆகியோரை மீண்டும் சந்திக்கும் போது மனம் நிலை அழிகிறது.

இந்தப் புத்தகம் பழைய புத்தகக் கடைகளின் ஒரு ரவுண்ட் அப் மட்டுமல்ல. பழைய ஆங்கில இதழ்களான Imprint, Life, Encounter, The Illustrated news of London , The Illustrated weekly of India போன்றவற்றுக்கும் ஓர் அஞ்சலிதான். இந்தப் புத்தகங்களின் பெருமை மட்டுமல்ல இவற்றில் தெரிவது. விட்டல் ராவ் அவர்களின் மிகப் பரந்த, விரிந்த, பன்முகத்தன்மை கொண்ட ரசனையும் வாசிப்புத் தன்மையும் கூடத்தான். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இது மிக அழகாக hard bound இல் மிக அழகான தாள்களில் அச்சடிக்கப்பட்ட கண்ணைக் கவரும் புத்தகமும் ஆகும்.

அன்று எந்த நூலைப் பற்றி உரையாற்ற வந்தாரோ அந்த நூலான தமிழகக் கோட்டைகள் நூலையும் படித்த பின்னரே இது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் இதை எழுதுவதற்கு தாமதம் ஆனதற்கு ஒரு காரணம்.

உண்மையில் தமிழகக் கோட்டைகள் புத்தகத்தை படித்தபின்பு மலைத்தேதான் போனேன். ஏனென்றால் இந்த நூலில் இடம் பெரும் பெரும்பாலான இடங்களுக்கு நான் போயிருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் இந்த நூலில் சொல்லப்படுவது போல கோட்டைகள் இருந்ததும் இருப்பதுமே நான் கேள்விப்பட்டதில்லை. உதாரணமாக ஓமலூர் என்ற சேலத்திற்கு அருகே இருக்கும் ஒரு ஊர் என் நெருங்கிய உறவினர்கள் இருக்கும் ஒன்று. ஆனால் அங்கே இருக்கும் என் உறவினர்களோ நண்பர்களோ ஒருபோதும் ஓமலூரில் ஒரு கோட்டை இருந்ததையோ அதன் சிதிலங்கள் இன்னமும் மிச்சமுள்ளதையோ சொல்லி நான் கேட்டதில்லை. இந்த புத்தகத்தை படிக்கும் வரை அப்படி ஒரு விஷயமே நான் அறிந்ததில்லை.

அதேபோல் ஹோசூரில் kenilworth castle என்ற ஒன்று இருந்தது மிக அழகாக இதில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள அதே பெயருள்ள கோட்டைப் போலவே இங்கும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி தன காதலிக்காக கட்டினான் என்பதும் காதலில் ஏமாற்றம் அடைந்தபின் தன நாயை சுட்டுக் கொன்றுவிட்டு அந்தக் கோட்டையிலேயே தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதும் அந்தக் கெனில்வொர்த் கோட்டைக்கு ஒரு காவியத் தன்மை தருகின்றன. அதில் உள்ள இன்னொரு மகத்தான சோகம் 1950களில் முழுமையாக இருந்த அந்த கோட்டை 2003ல் முழுவதுமாக இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டதாக விட்டல் ராவ் தெரிவிப்பதுதான்.

தமிழகத்தின் வரலாற்றில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய தந்தையும் மகனுமான அரசர்கள் என்று ராஜ ராஜனையும் ராஜேந்திர சோழனையும் கூறலாம். இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பு அதற்கு அடுத்த இடம் நிச்சயமாக ஹைதர் அலிக்கும் திப்பு சுல்தானுக்குமே என்று உறுதியாகக் கூறிவிடலாம். அந்த அளவிற்கு 18ம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் இருவரும் தமிழகத்தில் கொலோச்சியுள்ளனர். தமிழகத்தின் வட மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கோட்டைகளுமே இவர்கள் கட்டியதுதான் அல்லது புதுப்பித்ததுதான் என்பதும் கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப் பட்டினத்திலிருந்து வேலூர் வரை, தெற்கே திண்டுக்கல் வரை இவர்களது கோட்டைகள் இல்லாத இடம் இல்லை என்றும் இந்தப் புத்தகத்தை படிக்கும்போது தெரிகிறது. ஆங்கிலேயருடனான திப்புவின் இறுதிப் போரையும், அதில் அவர் அடையும் வீர மரணத்தையும், அதற்குப் பிறகு ஸ்ரீரங்கப்பட்டினத்தை காரண்வால்லிஸ் தலைமையிலான ஆங்கிலேயப் படை அழித்தொழிப்பதையும் பதிவு செய்யும் இடங்களில் விட்டல் ராவ் ஒரு கட்டுரையாளராக என்பதை விட ஒரு அற்புதமான படைப்பாளியாகவே மிளிர்கிறார் என்று சொல்ல வேண்டும்.

திப்புவைப் பற்றி இன்று பல்வேறு சித்திரங்கள் உள்ளன. ஒரு மத வெறியராகவும் , கொடுங்கோலராகவும் அவர் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். ஆனால் விட்டல் ராவின் இந்த நூலில் திப்பு ஒரு பெரும் வீரனாகவும், மதி நுட்பமுள்ள அரசனாகவும், அறிவியல் தொழில் நுட்பத்துக்கும் கட்டடக் கட்டுமானக் கலைக்கும் பேராதரவு தந்தவனாகவும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக அனைத்து வழிகளிலும் போராடிய ஒரு நாயகனாகவுமே தெரிகிறார்.

செஞ்சிக்கோட்டை மற்றும் வேலூர் கோட்டைகள் பற்றிய பதிவுகளும் மிக மிக அழகானவை. இந்த நூலை படித்து முடிக்கும்போது தோன்றுவதெல்லாம் எத்தனை அரிய செல்வங்களை எல்லாம் அவை இருப்பதேகூட அறியாமல் நாம் வெகு வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான். மேலும் ஒன்று தோன்றியது. வரலாறு என்றாலே தமிழகத்தில் சோழர்கள் சேரர்கள் பாண்டியர்கள் என்று தான் பொதுபுத்தியில் இருக்கிறது. ஆனால் விஜயநகரப் பேரரசும் அவர்களின் கீழ் தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களும் அந்தக் காலகட்டத்திலும் அதைத் தாண்டியும் ஆண்ட இஸ்லாமிய மன்னர்களான ஹைதர் திப்பு போன்றவர்களும் தமிழகத்துக் கட்டிடக் கலைக்கு ஆற்றிய பணிகள் நினைவுக்கே வருவதில்லை. அப்படியே அவர்கள் நினைவு கூரப்படும் ஓரிரு தருணங்களிலும் எதிர் மறையாகவேதான் நினைக்கப் படுகிறார்கள்.இந்தப் புத்தகம் அத்தகைய ஒரு கருத்தை மாற்றியமைக்கக் கூடியது.

தமிழகத்துக் கோட்டைகள் என்று பெயரிடப்பட்டாலும் கூட இந்த நூல் முக்கியமாக இரு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் பாராமஹால் என்றழைக்கப்பட்ட இன்றைய சேலம்,தர்மபுரி, கிருஷணகிரி மாவட்டங்களின் கோட்டைகளையும் , தமிழகத்துக்கு வெளியே பெங்களுரு மற்றும் திருப்பதி அருகே உள்ள ச்ந்ரகிரி கோட்டைகளை பற்றியும் விவரிக்கிறது. தென் தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் திருமெய்யம் கோட்டைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும். .இந்த நூல் அதனளவில் ஒரு முழுமை பெற்ற ஒன்றாகவே உள்ளது.

மொத்தத்தில் இப்படி சொல்லி முடிக்கலாம். ஒரு அபாரமான ஆளுமையின் இரு அற்புதமான புத்தகங்கள்.