தற்கொலை குறுங்கதைகள் – அராத்து

18ம் நூற்றாண்டு தொழிற்புரட்சிக்குப் பின்னான தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பிரமிக்கத்தக்கது. நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் பத்தாண்டுகளில் நிகழத் தொடங்கின. 20ம் நூற்றாண்டின் மத்தியில் பிறப்பெடுத்த கணினித் தொழில்நுட்பம் இந்த வேகத்தை மேலும் பன்மடங்காக்கியது. இந்த 21ம் நூற்றாண்டில் மனிதன் தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிமையாகிவிட்டான் என்றால் அது மிகையாகாது.

தொழில்நுட்ப புரட்சி பிரம்மாண்டமான நகரங்களை உருவாக்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்களை நகரங்களில் கொண்டு குவித்துள்ளது. பாரம்பரியத் தொழில்கள் அழிந்து ஆண்களும் பெண்களும் இன்று புதிய புதிய தொழில்களிலும் சூழ்நிலைகளிலும் பணிபுரியும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே பாரம்பரிய ஆண் பெண் உறவுகள்  வெகு வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. பொருள் தேடுவதில் நாம் அடைந்துள்ள மாற்றம் நம் கலாச்சாரம் என்று இதுவரை நாம் பொத்தி வைத்திருந்ததில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது.

பெருநகரங்களில் மனிதன் ஒரு சிதறுண்ட வாழ்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மேலும் மேலும் அதிக இளம் பெண்களை  மிக அந்நியமான சூழ்நிலையில் அந்நிய ஆண்களின் மத்தியில் பணிபுரியும், வாழும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிமைத்தனம் அதிகம் இருப்பினும் ஒரு சிறு உறவு வட்டம் அல்லது கிராமம்  அளித்து வந்த பாதுகாப்பு முற்றிலும் தகர்ந்து பெண் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் அவசியத்தை உருவாக்கியுள்ளது.

பொருளாதாரமே அடிக்கட்டுமானம், கலாச்சாரம் மேல்கட்டுமானம்தான் என்ற மார்க்சிய கருத்துவாக்கத்தை இன்று நிகழும் மாற்றங்கள் நினைவு கொள்ள வைக்கின்றன. சிதறுண்ட வாழ்க்கை, அந்நியத்தன்மை, புதிதாகக் கிடைத்துள்ள பொதுவெளியில் தனியாக நடமாடும் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை ஒரு புது மாதிரியான யுவர்களையும் யுவதிகளையும் இன்று அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு  மாநிலத் தலைநகரங்களிலும் உருவாக்கியுள்ளது. இவர்கள் இன்றைக்கு எழுதப்படும் தமிழின் தீவிர இலக்கியத்தில் சித்தரிக்கப்படுகிறார்களா?

மானுடம் என்றென்றும் எதிர்கொள்ளக்கூடிய கேள்விகளுக்கே நீண்டகால இலக்கிய மதிப்பு உண்டு எனினும் இன்று நம் கண் முன்னே நிகழும் மாற்றங்களும் இலக்கியத்தில் பதிவாவது மிக முக்கியமானது  என்றே நான் நினைக்கிறேன். அந்த வகையில்தான்  அண்மையில் படித்த அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் என்னைக் கவர்ந்தன.
இதைச் சொன்னதுமே என்  இலக்கிய நண்பர்கள் பலர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவர்களுக்கெல்லாம் அராத்துவின் பதிவுகள் பரிச்சயம் என்பது முக்கியமான ஒரு காரணமாக இருக்கலாம். நான் அராத்துவின் பதிவுகள் எதையும் இதற்கு முன்னால் படித்ததில்லை. அதனால் எந்தவிதமான முன்முடிவுகளுமின்றி இந்த நூலைப் படிக்க முடிந்தது என்றே நினைக்கிறேன்.

இதில் என்னை முதலில் கவர்ந்தது அவரது நடை. அதில் உள்ள எள்ளல் கலந்த நகைச்சுவை. மற்றும் வெகு நிச்சயமாக நான் மேலே சொன்ன இந்த நவீன யுகத்தின் இளைஞர்களும் யுவதிகளும். இந்த நவயுக வாலிபர்களின், யுவதிகளின் சிதறுண்ட வாழ்வைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் குறுங்கதை வடிவம் பொருத்தமானதாகவே உள்ளது. இதை யுவன் சந்திரசேகரின் மணற்கேணி போல தனித்தனி கதைகளாகவும் வாசிக்கலாம், ஒரே நாவலாகவும் ஒரு இணைப்புடன்  வாசிக்கலாம்.

எல்லா பெண் பாத்திரங்களின் பெயரும் சாந்திதான். சாந்தியின் காதலர்களின் பெயர்களும் கணவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த ஆண்பெயர்களும் அவர்களின் குணத்தைச் சொல்லும் காரணப்பெயர்கள்தான், ஊசி என்பது போல.

பல குறுங்கதைகள் அவற்றின் கூர்மைக்காக ரசிக்கலாம். ஆனால் இந்த வடிவத்தின் ஒரு குறைபாடு சுருக்கென்று தைக்கும் பல குறுங்கதைகள்கூட அடுத்தடுத்த கதைகளாகப் படிக்கும்போது நினைவிலிருந்து வழுக்கி வெளியே போய்விடுவதுதான். அதை மீறி சில கதைகள் மனதில் நிற்கத்தான் செய்கின்றன.

அதில் இரண்டு கதைகள், லாஸ்ட் பஸ் என்ற கதையும் இன்னொன்றும். லாஸ்ட் பஸ், தற்கால நவீன வாழ்வின் தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகிப்போன ஆம்னிபஸ்சையும் அதன் ஒட்டுனரையும் பற்றியது. கதை முடிவில் சுரீர் எனத் தைக்கும் விளைவை கொடுக்கும் கதை. இன்னொன்று, வேலைக்கு சென்று வீடு திரும்புவதற்குள் பல்வேறு ஆண்களின் பல்வேறு வகை தொந்தரவுகளை சந்தித்து அவற்றைக் குறித்து கணவனிடம் புகார் கூறும் பெண்ணின் கதை. அதை அவள் கணவன் எதிர்கொள்ளும் விதமும் அதற்கு அப்பெண்ணின் பதிலும் சிரிக்க வைத்தாலும் ஆழமான வேதனையையும் கொடுக்கும் ஒன்று.

இந்தக் கதைகளில் பளிச்சென்று கண்ணைக் குத்தும் ஒரு அம்சம் பட்டவர்த்தனமான மொழிப் பிரயோகம். தமிழ் இலக்கியத்தில்  விதிவிலக்காகவே பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகள் இந்தப் படைப்புகளில் வெகு சரளமாகவும் அதிக அளவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வார்த்தைப் பிரயோகங்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் விற்பனைச் சாதனை நாவல்கள் படிக்கும் நம் வாசகர்கள் ஆங்கிலத்தில் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை சலனமில்லாமல் தாண்டிச் செல்லும்போது  இவை தமிழில்  வந்தால் மட்டும் முகம் சுளிப்பது ஒரு போலித்தனம்தான். இது குறித்து வெகு ஆண்டுகளுக்கு முன்பே ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதியுள்ளது நினைவுக்கு வந்தது.

இந்தக் கதைகளை படித்து முடித்தபின் மேற்சொன்ன அந்த taboo உடைவதற்கான வேளை வந்துவிட்டது போலதான் தெரிகிறது. நிச்சயமாக இந்த மாதிரியான வார்த்தைகள் ஒரு அதிர்ச்சி மதிப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள் உண்டு. ஆனால் உண்மையிலேயே  ஒரு சில அலுப்பூட்டும், அருவருக்க வைக்கும் இடங்களில் இந்த வார்த்தைகள் மிகப் பொருத்தமானவையாகவே உள்ளன என்றும் சொல்ல வேண்டும். பழைய தமிழ் எழுத்துக்களில் பாராட்டும் விதமாக தஞ்சையின் வசவு வார்த்தைகள் இடம் பெறுவது போல.

இதை டிஜிமாடர்னிசம் என்ற வகை எழுத்து என்று சாரு தன்  முன்னுரையில் (சாருவிடமிருந்து ஒரு நல்ல கட்டுரை)  எழுதுகிறார். அப்படியல்ல அது வேறு, என்ற ஒரு சில கருத்துக்களையும் நான் கேள்வியுற்றேன். வகைப்பாடுகளைப் பற்றி கவலைப்படாமலேயே இதை நல்ல எழுத்து என்ற  வகையிலேயே நான்  சேர்ப்பேன். நிச்சயமாக இது ஒரு பொதுப்பாணியாக நிலை பெற முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இந்த பாணியிலான எதிர்கால தமிழ்   எழுத்துக்களுக்கு இந்த நூல் ஒரு முன்னோடியாக அமையும் என்று சொல்லலாம்.
தற்கொலை  குறுங்கதைகள், அராத்து,
ரூ. 180, உயிர்மை,