ஜெயமோகனின் வெண் முரசு ஒரு அப்டேட்

ஜெ வின் வெண் முரசு (மகாபாரதம்) ஆதிபர்வம் நிறைவை நெருங்குகிறது..மொகலாய வரலாறு குறித்து  கூறும் போது  ஒன்று சொல்லப்படுவதுண்டு. பாபருக்கும் அக்பருக்கும் இடையேயான ஒரு கமா தான் ஹுமாயுன் என்று.அதுபோல சந்தனு  பீஷ்மர் முதலியவர்களுக்கும் திருதுராஷ்ற்றன் பாண்டு,மற்றும் விதுரனுக்கும் இடையேயான கமாக்களாகவே நான் இதுவரை படித்த பாரதக் கதைகளில் சித்ராங்கதனும்,விசித்திரவீரியனும் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஜெ வின் வெண்முரசில்  அவர்கள் தனித்த அடையாளங்களோடு  முழு ஆளுமைகளாக சுடர்விடுகிரார்கள்  அதிலும் விசித்திரவீரியனின் பாத்திரப்படைப்பு  ஒருஅசாத்யமான கற்பனை வீச்சுடன்  நெஞ்சை அள்ளுகிறது.ஒளி  மிகுந்த ஒரு வால் நட்சத்திரம் போல்  ஜ்வலித்து அடங்குகிறான் விசித்திரவீரியன்.
அம்பையும் சத்யவதியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள்  என்றால், அம்பிகையும் புராவதியும்  கலையழகு மிளிரும் சிற்பங்களாக செதுக்கப் பட்டிருக்கிறார்கள்.அம்பாலிகையின் பேதமையும் மனதை அசைக்கிறது.ஜெ தொடர்ந்து பேணி வரும் ஒரு superlative tone  பிரமிக்கவைக்கிறது.
பாரதமும் கீதையும் குலக்கலப்பு பற்றி  நிறையப் பேசும் நூல்கள்.ஒரு வகையில் தாய் வழிச் சமூகத்தின் இறுதிகாலத்திலும்  தந்தை வழி சமூகத்தின்  தொடக்கக் காலத்திலும் நடந்திருக்கக்கூடிய கதை என்றும் கூறப்படுவதுண்டு.குலக்கலப்பு மற்றும் குல நிர்ணயம் (தாய் வழியா தந்தை வழியா)குறித்த தனது தனித்த பார்வை மூலம் சிந்தனைக்கு நிறைய  வேலை கொடுக்கிறார் ஜெ. கிருஷ்ணாவதாரத்துக்கும்  பாரதத்துக்கும் பூபாரம் குறைப்பது என்ற ஒரு malthusian  கோணமும் உண்டு. ஜெ அதை எங்கு எப்படி கையாளப் போகிறார் என்றும் அறிய மிக ஆவலாக உள்ளது.