விஷ்ணுபுரம் விருது விழா 2013

அனைவருக்கும் வணக்கம்.

நவீன தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளிகளும் சான்றோர்களும் நிறைந்த இந்த அவையில், ஒரு சாதாரண வாசகனாக என் ரசனையைப் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

நான் இது போன்ற மேடையில் பேசுவது இதுவே முதல்முறை. நான் இந்த மேடையிலே பேசுவதற்கும் இந்த விழாவின் தலைவர் திரு இ.பா அவர்கள் இந்த மேடையிலே இருப்பதற்கும் ஒரு ஆச்சர்யமான பொருத்தம் உண்டு.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் நான் முதன் முதலில் அறிந்தது  இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரைத்தான். நான் ஒன்பதாவது படிக்கும்போது (CBSE முறையில் படித்து வந்தேன்), எனக்கு தமிழ்த் துணைப் பாடநூலாக இ. பா. அவர்களின் ஔரங்கஜீப் என்னும் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டது. அதில் அப்போது நந்தன் கதை, கோவில், போர்வை போர்த்திய உடல்கள் மற்றும் ஔரங்கஜீப் என்ற நான்கு நாடகங்கள் இருந்தன. ஒன்பதாவது படிக்கும் சிறுவர்களுக்கு போர்வை போர்த்திய உடல்கள் போன்ற ஒரு நாடகத்தை நடத்த வேண்டியிருப்பதைக் கண்ட எங்கள் தமிழாசிரியர் அரண்டு போனார். தமிழகமெங்கும் அதே கதைதான் என்று பிறகு தெரிந்தது. எப்படியோ அதை மாற்றி, ‘இந்தியாவின் தேசிய குயில்கள்’ என்ற மடியான ஒரு புத்தகத்தைத் துணைப் பாடநூல் ஆக்கினார். ஆனால் ஔரங்கஜீப் என்னுடன் இன்று வரை தங்கியிருக்கிறார்.

பின்னர் இ பாவின் அத்தனை நூல்களையும் நான் தேடித் தேடி படித்தேன். அவரது சமீபத்திய படைப்பான கிருஷ்ணா கிருஷ்ணாவைப் பற்றி ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். நண்பர் தியாகு நடத்தும் வாடகை நூல் நிலயத்தில் அந்த நூலைப் படித்தவர்களில் அநேகமாக அனைவருமே அதன் பிரதியைத் தங்களிடமே வைத்துக் கொள்ள விரும்பினர். அந்த வகையில் தியாகுவே ஏறக்குறைய 80 பிரதிகளைத் தருவித்துக் கொடுத்திருக்கிறார் என்பதையும், இன்றும் அந்த நூல் எளிதில் வகுத்துக்கொள்ள இயலாத ஒரு நவீன ஆக்கமாக, மாறாது கவர்ந்திழுக்கும் ஒரு நூலாகத் திகழ்கிறது என்பதையும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நவீனத் தமிழ்  இலக்கியத்தில் எனக்கு முதன் முதலில் அறிமுகமான எழுத்தாளர் இ.பா. என்றால் மிகச் சமீபத்தில் அறிமுகமானவர் தெளிவத்தை ஜோசெப். 1983ம் ஆண்டிலிருந்தே  இலங்கை எழுத்தாளர்கள் குறித்து  ஓரளவு  அறிமுகம் உண்டு என்றாலும் அவர்களில் தெளிவத்தை ஜோசப் என்ற  எழுத்தாளரையோ அவரது படைப்புகளையோ நான் மிகச் சமீப காலம் வரை அறிந்து கொள்ளவில்லை என்ற உண்மையை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இவ்வுணர்வு அவரது படைப்புகளை இப்போது வாசித்தவுடன் மேலும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

காரணம், அவரது  எழுத்தை வாசித்த மறு கணத்திலிருந்தே அவர் எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு எழுத்தாளரானார். நண்பர்களே, ஒரு படைப்பாளி நம்மை ஏன் கவர்கிறார் என்று நான் எப்போதும் யோசிப்பதுண்டு. அப்போது எனக்கு 2 பதில்கள் தோன்றுவதுண்டு. ஒன்று, குறிப்பிட்ட ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அவர் ஒரு புதிய உலகை, வாழ்க்கையைக் காட்டுகிறார். இரண்டு, நான் அறிந்த உலகத்தையே எனக்கு அவர் புது வெளிச்சத்தில், மாறுபட்ட கோணத்தில் காட்டுகிறார். இந்த 2 வகைகளிலுமே தெ. ஜோ எனக்கு மிகவும் பிடித்தவரானார்.

இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் கதைகளில் எனக்கு, ‘பால் மரக்காட்டினிலே’ என்ற கதையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’யும், ‘காக்காய் விரட்டப் போனவன்’, என்ற கதையும் நினைவிலிருக்கிறது. ஆனால் அவை ஒரு நாவல் அளிக்கக்கூடிய முழுமையான வாழ்வின் அனுபவத்தை எனக்கு வழங்கவில்லை. நான் அறிந்திராத இலங்கை மலையகத்  தமிழ் வாழ்க்கை,  தெஜோ. அவர்களின் எழுத்தின் மூலம்  மலையகத்தின் குளிர், மழையில் நனைந்த அந்த மண் மணம், தேயிலை வாசம், தொழிலாளர்களின் வியர்வைக் குருதி மணம்  ஆகியவை முகத்தில் அறைந்து அறிமுகமாகின.

அவரது படைப்புகளை நான் படிக்கும்தோறும் என் மனதில் விவிலிய வாசகமான, ‘நரிகளுக்கும் பதுங்கு குழிகளுண்டு வானத்துப் பறவைகளுக்கும் கூடுகளுண்டு ஆனால் மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை,” என்ற பைபிள் வாசகம் மீண்டும் மீண்டும் எழுந்து வந்தது. ஜோசப்பின் கதைமாந்தர் அனைவரும் இடம் விட்டு இடம் பெயர்ந்து இருக்க இடமும் பிழைக்க வாய்ப்பும் வாழும் வகையும் தேடி அலையும் கதியற்றவர்கள், நிம்மதியாக தலை சாய்க்க இயலாதவர்கள்.

இங்கு இடம் என்பது  place மட்டுமல்ல, வெளியாகிய space கூடத்தான். இந்த இடத்துக்கும் இருப்புக்குமான போராட்டத்தை இரண்டு தலைமுறை  மனிதர்களின் வாழ்வைக் கொண்டு சித்தரிக்கிறார் ஜோ. நான் படித்த அவரது கதைகளில் ‘மீன்கள்’, ‘கத்தியின்றி ரத்தமின்றி’ ஆகிய இரண்டு கதைகள் மலையக பின்னணியிலும், ‘மழலை’, ‘பயணம்’, ‘அம்மா’ ஆகிய கதைகள் மலையகம் நீங்கி நகர்ப்புற பின்னணியிலும் உள்ளன.

‘மீன்கள்’ என்ற அற்புதமான சிறுகதையில் தான் வாழும் இடத்தின் போதாமையால் ஒரு அவலமான நிகழ்வுக்கு ஆளான ஒரு ஏழை தொழிலாளி வீட்டில் தேவைப்படும் இடப் போதாமையை நிவர்த்திக்கும் பொருட்டு அலைந்து திரிந்து இறுதியில் தனக்கு பழக்கமில்லாத செயலைச் செய்து அவமானப்பட்டு குறுகுவதில் முடிகிறது. மீன்களில் வீட்டின் இடம் என்றால் ‘பயணம்’ சிறுகதையில் பேருந்தில் இடம். பேருந்தில் முண்டியடித்து ஏறி அலையும் மனிதர்களின் அவலச் சித்திரம் ஒன்று நமக்கு கிடைக்கிறது. இடம் பிடிப்பதில் மனிதர்களுக்குள் இருக்கும் போட்டி பொதுவானதுதான். ஆனால் இக்கதையில் 3 பேர் உட்காரக்கூடிய இடத்தில் 2 சிங்களப் பெண்கள் தாராளமாக அமர்ந்திருப்பதும் மற்றப் பயணிகளை விரட்டும் நடத்துனர் அதைக் கண்டும் காணாதிருப்பதும் இலங்கைக்கு உரிய இன அரசியலை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. ‘மனிதர்கள் நல்லவர்கள்’ என்ற சிறுகதை நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் செயல்கள்கூட ஒருவருக்கு தீமையில் முடிவதன் முரணைச் சொல்கிறது.

‘மழலை’, ‘அம்மா’, இருகதைகளும் எங்கும் நடக்கக்கூடியவை, ஆனால் சித்தரிப்பின் அழகில் தனித்து நிற்பவை. குறிப்பாக, ‘அம்மா ஏமாற்ற மாட்டாள்’, என்ற இறுதி வாக்கியம் ஒரு தவிர்க்க இயலாத குரூரமான உண்மையை கூறுகிறது.

அவரது ‘குடை நிழல்’ என்ற நாவல் ஒரு கிளாசிக் என்றே கூறலாம். ஒரு த்ரில்லர் கதைக்கு உரிய இறுக்கமான கட்டமைப்பும் மெல்லப் பரவி வரும் ஒரு திகிலும் இணைந்து அமைந்த ஒன்று. ‘குடை நிழல்’ என்பது அதிகாரத்தின் குறியீடு என்றே ஆசிரியர் சொல்கிறார். இருக்கலாம். ஆனால் எனக்கென்னவோ அது, ‘காற்றடித்தால் அவன் வீடாவான், கடும் மழையில் அவன் குடையாவான்’, என்ற பாடல் வரிகளில் வரும் புகலிடமாகவே தோன்றியது. அதற்குத்தான் அந்த மலையக மக்கள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.

நடு இரவுகளில் தட்டப்படும் கதவுகளையும் இழுத்துச் செல்லப்பட்டு திரும்பி வராத ஆண்களையும் நான் நிறையக் கட்டுரைகளில் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த ஒரு கதை நூறு கட்டுரைகளுக்குச் சமம். சிங்களப் பள்ளி, தமிழ்ப் பள்ளிகளின் இனப்பெருமைகள், கதைசொல்லியின் தாய் தந்தைக்கு இடையேயான உறவைக் கூறும் விதம் என்று ஏராளமான நுட்பமான சித்தரிப்புகள் உண்டு. ஆனால் அதி உக்கிரமான சித்தரிப்பு கதைசொல்லியின் மகள் உண்ணும் மீனின் வயிற்றில் இருக்கும் ஒரு மனிதக் கைவிரல்.

இந்த நாவலில் என்னைக் கவர்ந்த இன்னொரு அம்சம் கதைசொல்லி உட்பட ஒரே ஒரு பாத்திரத்தை தவிர்த்து வேறு யாருடைய பெயருமே குறிப்பிடப்படாமல் இருப்பது. இது ஒரு வித்தியாசமான சிறப்பம்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. பெயர் குறிப்பிடப்படும் பாத்திரம் ஓரளவு அதிகாரம் கொண்டது. அந்தப் பெயரேகூட இலங்கையில் நிலவிவரும் ஒரு அதிகாரச் சமநிலையின்மையைச் சுட்டுவது. அதிகாரமற்றவர்களுக்குப் பெயரடையாளம்கூடத் தேவையில்லை என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம்.

ஜோசப்பின் கதைகளிலும் குறுநாவல்களிலும் வரும் பெண் பாத்திரங்கள் தனித்துவம் மிக்கவை. ‘பாலாய்’ குறுநாவலின் பாலாய், ‘ஞாயிறு வந்தது’ குறுநாவலின் காத்தாயி, ‘குடை நிழல்’ கதைசொல்லியின் தாய், ‘அம்மா’வில் வரும் தாய் – இவர்கள் ஒரே சமயத்தில் சம்பிரதாய பெண் பாத்திரங்களாகவும் தம்மளவில் தனித்த உறுதியும் நெஞ்சுரமும் கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

இம்மலையகத்தின் நடுவே நாடு என்று அழைக்கப்படும் பகுதிகளில் வாழும் சிங்களவர்களைப் பற்றி கூறும்போது  இனச்சார்பற்ற ஒரு சமநிலை அவரிடம் வெளிப்படுகிறது. அதே போல் துரைகள், துரைசானிகள், கணக்கர்கள் அனைவரையும் ஒரு சமநிலையுடனேயே அவர் அணுகுகிறார். வெள்ளை துரைகள் போய் கருப்பு துரைகள் வந்த பின்பு அவர்களைப் பற்றிய தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நல்ல நகைச்சுவை உணர்வுடனே பதிவாகியுள்ளது.

ஜோசப் அவர்களின் கதை சொல்லும் விதம் மிக எளிமையானது. அலங்காரமற்ற, பகட்டுகளற்ற மிக யதார்த்தமான கூறுமுறையே அவரது தனித்தன்மை. தேவையற்ற விவரணைகள் ஏதுமில்லை, ஆனால் தேவைப்படும் இடங்களில் மிகக் கூர்மையான உவமைகள் வந்து விழுகின்றன. நுவரெலியாவின் குளிரை விளக்க அவர் சொல்வது ‘அவனுக்கு 2 சூரியன்கள் இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தான்,’ என்ற ஒற்றை வரி. மலைகளை வர்ணிக்கும்போது அவர் சொல்வது, ‘நடப்பவைகள் வெளியே தெரியாமல் மறைக்க எழும்பியவை போல்,’ என்பது. கல் பாதையில் கல் தவறிய ஒரு வெற்றிடத்தை பல் விழுந்த ஈறு என்று சொல்லும் விதம், எனச் சொல்லிக்கொண்டே போகலாம். லயம் வீடுகளின் இறுக்கத்தை நம்மையும் மூச்சு முட்ட வைக்கும் வண்ணம் அவரால் தத்ரூபமாகக் காட்ட முடிகிறது.

ஜோசப்பின் படைப்புகளில் நான் கண்ட இன்னொரு தனித்தன்மை உண்டு. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்று வாழும் தமிழர்கள் தம் சாதி அடையாளத்தை தொலைப்பதே இல்லை. ஆனால் ஜோசப்பின் கதைகளில் வரும் மலையகத் தமிழர்களுக்கு எந்த சாதி அடையாளமும் இல்லை. இது அவரது பலமா அல்லது பலவீனமா என்றுகூட விவாதிக்கலாம்.

இவற்றையெல்லாம் தாண்டி ஜோசப் அவர்களின் படைப்புகளை முக்கியத்துவத்தை நன் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் உணர்ந்தேன்.

19ம் நூற்றாண்டில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் பல நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்கச் சென்றார்கள், அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதும் அவர்களின் சந்ததிகள் இன்றும் அங்கெல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் பாடப் புத்தக வரலாறு. ஆனால் அந்த மக்கள், அவர்களின் சந்ததிகள் அங்கு எப்படி அல்லல்பட்டார்கள், அவர்களின் சந்ததிகள் இன்று எப்படி வாழ்கிறார்கள் என்பது ஒவ்வொரு புலம்பெயர்ந்த குடும்பமும் கொண்டிருக்கும் தனி வரலாறு. பாதல் சர்க்காரின் வார்த்தையில் சொல்வதானால் மீதி சரித்திரம்.

அந்த மீதி சரித்திரத்தை, மக்கள் வரலாற்றைப் பதிவு செய்பவர்கள் indian diasporan writers என்றும் அவர்தம் இலக்கியம் diasporan literature என்றும் தனித்த வகைப்பட்டு இன்று இந்திய ஆங்கில இலக்கியத்தில் தனியிடம் பிடித்திருக்கிறது. அந்த எழுத்தாளர்களில் ஒருவரான வி.எஸ். நைபால் நோபல் பரிசு பெற்றதும் நாம் அறிவோம். ஆனால் அந்த இந்தியன் டையாஸ்போரன் எழுத்தில் தமிழுக்கென்ற ஒரு தனியிடம் இல்லை.

பஞ்சம் பிழைக்கப் போன இந்தியர் அனைவருமே கூலிகள் என்ற தமிழ்ச் சொல்லாலேயே அன்று அழைக்கப்பட்டனர். கூலி என்ற தமிழ்ச்சொல் இடம் பெறாத உலகப் பெருமொழிகளே இல்லை என்று கூட நான் படித்திருக்கிறேன் – ஆனால் அந்த அசலான தமிழ்கூலிகளின் வரலாறு குறித்த நமது அக்கறை தேய்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம் நான் சொல்ல முடியும்.

சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வீராசாமி பெருமாள் என்ற இளம் ஆட்டக்காரர் இடம் பெற்றிருந்தார். இப்படி ஒரு அசலான தமிழ்ப் பெயர் கொண்ட ஒரு இளம் வீரர் தமிழக கிரிக்கெட் அணியில்கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நம் தமிழகத்து நகர்ப்புறங்களில்கூட இன்று ஒரு 20 வயது இளைஞனுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதை நாம் காணமுடியாது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வீராசாமி பெருமாள் குயனாவைச் சேர்ந்தவர். அந்த நாட்டிலே ஒரு தமிழ் தந்தை தன் மகனுக்கு தன் பாட்டனாரின் பெயரையோ அல்லது பாட்டனுக்குப் பாட்டன் பெயரையோ சூட்டி பெரிய ஒரு வரலாற்றை ஒற்றைப் பெயரின் மூலமாகத் தெரிவிக்கிறார். நம் தமிழ் பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் அந்த இளம் ஆட்டக்காரரை பேட்டி கண்டு அவரது குடும்ப வரலாற்றை  வெளிக்கொணர்வார்கள் என நான் எதிபார்த்தேன் – ஆனால் அவரது பெயர் நமக்கு ஒரு செய்தியாகவே தெரியவில்லை. நான் பார்த்தவரை ஒரு தமிழ் இதழிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அப்படி ஒரு கட்டுரையோ பேட்டியோ வரவில்லை.

ஒரு 25 – 30 வருடங்களுக்கு முன்கூட காளிசரண் போன்றவர்கள் இந்தியா வரும்போது அவரது பின்னணி பற்றிய கட்டுரைகளை நான் படித்ததுண்டு. அந்த ஆர்வம் இன்று இல்லை என்பது மிகவும் சோர்வளிக்கிறது. மனிதர்கள் தங்கள் தனித்த மொழி, இன அடையாளங்களை மிக வேகமாக இழந்துவரும் இந்த உலகமயச் சூழலில்தான் அந்த தமிழ்கூலிகளின் வாழ்வைப் பதிவு செய்யும் தெஜோ. போன்ற கலைஞர்களின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

நமக்கு இன்று பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், மொரிஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து தமிழ் இலக்கியம் கிடைப்பதில்லை. மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து ஓரளவு கிடைக்கிறது. அதனாலேயே இலங்கை மலையகத் தமிழரின் மக்கள் வரலாற்றின் முக்கியத்துவமும் அதைப் பதிவு செய்யும் தெ.ஜோ அவர்களின் முக்கியத்துவமும் பன்மடங்கு அதிகமாகிறது.

இவ்வளவு சிறப்புமிக்க இவரது எழுத்துக்கள் தமிழகத்திலேயே இன்னும் பரவலாக போய்ச்சேர வேண்டியுள்ளது. இவர் அகில இந்திய கவனமும் உலகளாவிய கவனமும் பெற வேண்டும் என்ற எனது ஆசையினை தெரிவித்துக்கொண்டு, விருது பெரும் திரு. தெ. ஜோ அவர்களை வாழ்த்தி வணங்கி இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய எனதருமை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டச் சகோதரர்களுக்கும், எங்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் ஜெயமோகன் அவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம்.

(2013ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு 22.12.2013 அன்று வழங்கப்பட்டபோது ஆற்றிய வாழ்த்துரையின் எழுத்து வடிவம்)