காவல் கோட்டம் – இருள் நிறைக்கும் வெளிகள்

காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற செய்தி குறித்து கேள்விப்பட்டவுடனேயே முதலில் தோன்றிய எண்ணம், “ஆகா, நாம் ஏற்கனவே படித்துவிட்ட ஒரு புத்தகத்திற்கு அவார்ட் கிடைத்திருக்கிறதே,”  என்ற மகிழ்ச்சிதான்.  பெரும்பாலான சமயங்களில் பரிசு வாங்கிய ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக அலையோ அலை என்று அலைய வேண்டியிருக்கும். இம்முறை அம்மாதிரியில்லை. ஏற்கனவே நான் படித்து மகிழ்ந்து நண்பர்களுக்குப் பரிந்துரை செய்த ஒரு புத்தகத்திற்குப் பரிசு என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தந்தது.

காவல் கோட்டம் கிட்டத்தட்ட 1050 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம். படிக்கும்போது சுமை தாங்காமல் இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு வேளை இப்புத்தகத்தின் ஒருமை சிதைந்துவிடும் என்று எழுத்தாளரும் பதிப்பாளரும் நினைத்திருக்கக்கூடும்.

நாவலைப் படித்து இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நான் இதை இப்போது என் நினைவிலிருந்து எழுதுகிறேன். எது நினைவில் நிற்கிறதோ அதுவே அதன் தாக்கம் என்ற அளவில் இந்த நாவல் என் மனதில் பெற்றுள்ள வடிவம் என்ன,  அதில் நான் எவற்றை சிறப்பான, கவனிக்கத்தக்க பகுதிகளாகக் கருதியிருக்கிறேன் என்பதை இங்கு நான் கண்டடைகிறேன்.

ஒரு நகரத்தையும் ஒரு சமூகத்தையும் மையமாகக் கொண்ட,  அதன் அறுநூறு ஆண்டுகால வரலாற்றைப் பேசும்  ஒரு பெரும் நாவல் காவல்கோட்டம்.  மாலிக் கபூரின் மதுரை வெற்றியில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை விரியும் இந்நாவல், ஒரு சமூகத்தின் கள்வர்-காவலர் என்ற இருமை நிலையை அதன் அறுநூறு ஆண்டுகால வரலாற்றில், விஜயநகரப் பேரரசின் ஆளுமைக்கு மதுரை ஆட்பட்ட வரலாற்றையும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியும் இணைத்துப் பேசுகிறது.  இந்த அறுநூறு ஆண்டு காலகட்டத்தில் சு வெங்கடேசனின் பார்வையில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகள் நாவல் வடிவம் பெற்றுள்ளன. பல சம்பவங்கள், பல மனிதர்கள்.

வேளாண் நாகரிகத்தினுள் நுழைந்திராத தாதனூர் கள்ளர்கள் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரையின் காவலதிகாரம் பெறுகிறார்கள்.  பின்னர் ஆங்கில அரசு மதுரையைக் கைப்பற்றும்போது கர்னல் ப்ளாக்பர்ன் மதுரையின் காவல் அமைப்பை மாற்றியமைக்கிறார்.  கள்ளர்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.  பிற சமூகத்தினரையும் உள்ளடக்கிய காவல் படையை பிரிட்டிஷ் அரசு அமைக்கும்போது, அவர்களுக்குக் கீழ் கள்ளர்கள் பணியாற்றும் சூழல் எழுகிறது. அவர்கள் அதை எதிர்த்துப் போராடும்போது  அதிகார அமைப்புக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள். குற்றவாளிச் சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருத்தப்படுகிறார்கள்.  காவல் கோட்டத்தின் களம் இது என்று ஓரளவு உறுதியாகச் சொல்லலாம்.

ஆனால் காவல் கோட்டத்தைப் பற்றிப் பேசுமுன் முதலாவதாக சு வெங்கடேசன் களவை அதீதமான கற்பனையினூடாக (ரொமாண்டிசைஸ் செய்து) விவரித்திருப்பதைச் சொல்ல வேண்டும்- மதுரை கோட்டை அழிக்கப்படும்போது அதன் காவல் தெய்வங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவது ஒரு பெரும் துக்கத்தைத் தரக்கூடிய கவித்துவ மொழியில் விவரிக்கப்படுகிறது.  மதுரையில் காவலதிகாரத்துடன் இருந்த ஒரு சமூகம்  ஒரு குற்றச் சமூக முத்திரை பெற்று அதிகார அமைப்பை விட்டு விலக்கப்படுவதன் சோகம் இந்த விவரிப்பில் ஒரு முழுமையான படிம நேர்த்தி பெறுகிறது. இதே படிம நேர்த்தி காவல் கோட்டத்தை  நிறைக்கும் இரவு,  இருள் வர்ணனைகளில் அடையப்பட்டுள்ளது.

நாவலில் இடம்பெறும் ஒரு சம்பவத்தை முக்கியமானதாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்: எவரும் அனுமதியின்றி நுழையமுடியாத கட்டுக்கோப்பான அமைப்பு கொண்டது என்று பெருமையாக பேசப்படும் திருமலை நாயக்கரால் புதிதாகக் கட்டப்பட்ட மாளிகைக்குள் சவால் விட்டு, கன்னம் வைத்து நுழைத்து இரண்டு ராஜமுத்திரைகளைக் களவாடுகிறான் கழுவன். கைது செய்யப்பட்டதும் அவனுக்கு சவுக்கடி தண்டனை விதிக்கும் திருமலை மன்னர், கழுவன் தண்டனை பெற்றபின் அவனது திறமையைப் பாராட்டி அந்த இரு ராஜமுத்திரைகளையும் அவனுக்கே பரிசாக அளித்து விடுகிறார்.

இந்தக் கதைக்குப் பின் உள்ள வரலாற்று சான்றுகள் எவை என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.  ஆனால், சு வெங்கடேசனின் விவரிப்பில், குறிப்பாக இந்த நிகழ்வில்,  களவு தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை மாறி அது அதன் தொழில் நேர்த்திக்காக ரசிக்கப்பட வேண்டிய கலையாக உருவகம் பெறுகிறது. பொதுவாகவே நாவலெங்கும்  களவுச் சம்பவங்களைச் சித்தரிக்கும் விவரணைகளில் அவரது மொழி ரசனையின் உயர்நிலைகளைத் தொடுகிறது.  கள்வர்களைக் காவலர்களாக ஏற்றுக் கொள்வதில் உள்ள முரண்பாடுகளைக் கடக்க இத்தகைய அதீதமான கற்பனை (romantic imagination) தேவைப்படுகிறது-  ஒரு புனைவின் சுவையான விவரிப்பில்  களவு கலையாக உருமாற்றம் பெறும்போது கள்வர்களை காவலர்களாக ஏற்க உதவும் கற்பனை வெளியொன்று உருவாக்கப்படுகிறது-  ஒரு சமூக, அரசியல் கட்டாயத்தின் காரணமாக நிகழ்த்தப்பட வேண்டிய பார்வை மாற்றத்துக்கு அறிவுப்புல ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றைக் கட்டமைத்துக் கொள்ளத் துணை செய்யும் கட்டளைப் படிவப் பெயர்வுகள் (paradigm shifts) இவ்வகை கற்பனை விரிவாக்கத்தால் சாத்தியப்படுகிறது.  அதீத கற்பனையைக் கையாண்டு இதைச் சாதிப்பதில் சு வெங்கடேசன் பெறும் வெற்றியே நாவலின் வெற்றி.

காவல்கோட்டம் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இயல்பான நாவல் என்று  பேசப்பட்டாலும்  படைப்பூக்கத்தின் வெளிப்பாடாக இது உணர்வுத்தளத்தில் வெற்றி பெற சு வெங்கடேசனின் அதீதமான கற்பனை (romantic imagination) பெரிய அளவில் பங்காற்றுகிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.  களவைக் கலையாக்கும் அவரது நுண்விவரணைகள், அங்கு அவரது மொழி அடையும் உயர் ரசனையின் வெற்றிகள்  சிறப்பான வாசிப்பு அனுபவத்தைத் தருவனவாக உள்ளன.

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு நாவலைப் பற்றி முழுமையாகப் பேசுவது என்பது முடியாத காரியம். ஆனால்,  அதன் மையத்தில் உள்ள காவல் தெய்வங்கள் மற்றும் இருள் படிமங்கள், களவைக் கலையாக்கும் கற்பனையின் சொல்லாட்சி – இவை காவல் கோட்டம் நாவலுள் நாம் செல்ல ஒரு எளிய, துவக்க கட்ட திறப்பைத் தரக் கூடும்.  இதைத் தவிர இந்த நாவலை அறிமுகப்படுத்தும் முகமாக அற்புதமாக எழுதப்பட்ட சில இடங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

OoOoOo

நாவலின் துவக்கத்தில் குமார கம்பணனின் படைகள் வைகையாற்றைக் கடந்து மதுரையுள் நுழைவது விவரிக்கப்படுகிறது. இங்கு ஒரு திரைப்படத்தில் நாம் காணக்கூடிய பெரும்பரவலான காட்சியமைப்புக்கு இணையான சொல்லாட்சி சு வெங்கடேசனுக்கு சாத்தியப்பட்டுள்ளது.   இதே சொல்லாட்சி திரைப்படங்களால் எட்ட முடியாத உயரத்துக்கும் காவல் கோட்டத்தைக் கொண்டு செல்கிறது –  யார் எங்கு நிற்க வேண்டும், யார் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்பன போன்ற ஆணைகள், மதுரையை எப்படி பிரித்துக் கொள்ளப்படுகிறது என்ற விவரணைகள், ஒருமைப்பாடுடைய போர் அமைப்பாகத் தோற்றம் தரும் விஜயநகரப் படையின் உண்மை நிலையில் நிலவும் சமூகப் பகுப்புகளையும் அதன் அதிகாரப் படிநிலையையும் முழுமையாக காட்சிப்படுத்துகின்றன.

ஸ்ரீ ஜானகிராணி கனகநூகா என்றழைக்கப்படும் குமாரக் கம்பணனின் மனைவி கங்கா தேவியின் பரிவாரத்தில் இருக்கும் ஒரு சிறு பெண் மதுரையை வெற்றி கொள்ள தன்னை மாய்த்துக் கொள்கிறாள். இது அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. இங்கும் நாம் வெங்கடேசனின் அதீத கற்பனை வெற்றி பெறுவதைக் காண முடிகிறது.

தாதுவருஷப் பஞ்சத்தால் ஏற்படும் இடப்பெயர்வுகள்.  அதைத் தொடர்ந்து பென்னிக்விக்கால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்படுவது ஒரு ஜெசுவிட் பாதிரியார் எழுதும் கடிதமாக விவரிக்கப்படுகிறது. இது கிருத்துவத்தின் வருகையைப் பதிவு செய்கிறது.  அந்த அணையை நிர்மாணிக்க பணிபுரியும் கள்ளர்கள் மலேரியாவுக்கு பலியாகும் நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகள்.

இந்த தாது வருஷப் பஞ்சத்தின்போது இரு பெண்கள் தங்கள் செயல்களால் சரித்திரத்தில் இடம் பெறுகின்றனர். ஒருவர் நாமனைவரும் அறிந்த நல்லதங்காள். மற்றவர் குந்தத்தம்மாள் என்ற தேவதாசிப் பெண். தன்னிடமுள்ள சொத்துகளைத் தன் கடைசி நகை வரை விற்று கஞ்சி ஊற்றும் சித்திரம் அருமையான ஒன்று. மற்றொரு தேவதாசிப் பெண் உருவாக்கிய கூத்தியார்குண்டு என்றழைக்கப்படும் குளம் மதுரையில் இன்றும் உண்டு. இவை குறித்த விவரணைகள் எளிய மக்களை எளிய மக்களே அறிய உதவும் சொற்சித்திரங்கள்.

ரசிக்கத்தக்க பல சித்தரிப்புகள் கொண்ட இந்த நாவலின் சில பகுதிகள் முழுவதுமே பாடப் புத்தக மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவை நாவலின் சுவாரஸ்யத்தைக் குறைக்கும் தடைகளாக இருப்பதை உணர முடிகிறது.  ஆனால் பொதுவாகச் சொன்னால், வரலாற்றில் பேசப்படாமல் எப்போதும் வாழ்ந்து மறையும் சாமானிய மக்களின் வாழ்வைச் சுவையாகச் சித்தரிப்பதில் தன் முதல் நாவலிலேயே கணிசமான அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் சு வெங்கடேசன்.

நாவலை வாசித்து முடித்தபின் மனதை நெருடும் சில விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். பொதுவாகவே இந்நாவலில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்ந்துள்ளதை உணர முடிகிறது. ஏற்கப்பட்ட வரலாற்றில் நேர்மறையாகப் பேசப்படும் பலர் இங்கு எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர் – கிருஷ்ண தேவராயர், வித்யாரண்யர், திருமலை நாயக்கர் முதலானவர்களின் பாத்திரப்படைப்பை இதற்கு காட்டுகளாகச் சுட்டலாம்.

விஜயநகரப் பேரரசின் ஸ்தாபிதம் குறித்து வெங்கடேசனின் பார்வை சந்தேகத்துக்கிடமின்றி ஏற்கப்பட்ட வரலாற்றோடு முரண்படுவதாக உள்ளது. எந்த தரவுகளின் அடிப்படையில் இத்தகைய விவரிப்புக்கு மெய்த்தன்மை கோரப்படுகிறது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளும் வகையில் எவ்விதமான சான்றாதாரமாவது உள்ளதா என்ற கேள்விக்கு இந்நூலில் பதிலில்லை. ஏழாயிரம் சமணர்கள் மதுரை மாநகர வரலாற்றில் கழுவேற்றப்பட்டதாக அமணமலையில் கங்கா தேவி நினைத்துப் பார்ப்பது இந்நாவலின் கதைக்களத்துக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது. குமாரகம்பணனின் மதுரா விஜயம் மீனாட்சியம்மனை மீட்கவே என்பது ஏற்கப்பட்ட வரலாறாக உள்ளது என்ற பின்னணியில் இக்காட்சி வலிந்து திணிக்கப்பட்ட கதையாடலாக உள்ளது.

தாதனூர் கள்ளர்களுக்கும் அவர்களின் சமகால உயர்நிலை சமூகங்கள் பலவற்றுக்கும் இடையுள்ள உறவை வெவ்வேறு வகைகளில் பேசுகிறது இந்நாவல். ஆனால் இதே தாதனூர் கள்ளர்கள் தங்களைவிட தாழ்நிலையில் இருந்த சமூகங்களுடன் எவ்வகைப்பட்ட உறவு கொண்டிருந்தனர் என்பது இந்நாவலில் பேசப்படுவதேயில்லை. காவல் கோட்டம் ஒரு பொழுதுபோக்கு நாவலல்ல. உண்மைகளின் அடிப்படையில் இன்றைய சமுதாயத்துக்கான பாடங்களை உணர்த்தும் தன்மை கொண்ட நாவலாகவும் ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்க முற்படும் இயக்கத்தின் துணைப் பிரதியாகவும் முன்னிறுத்தப்படும் ‘உண்மையான வரலாற்றுச் சித்தரிப்பு’ இது.  பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு போன்ற இடங்களில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பின்னணியில் சு வெங்கடேசன் பேசத் தவறிய இந்த மௌன வெற்றிடத்தை விடையற்ற பல கேள்விகள் நிறைக்கின்றன.

அறியப்படாத வரலாற்றை நிறுவ முற்படும் இத்தகைய ஒரு மாபெரும் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் பின்னிணைப்புகளில் ஆதார தரவுகள் குறித்த விரிவான பட்டியல் (Bibliography) சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். காவல் கோட்டம் வரலாற்றைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்வதால், இந்தப் போதாமையை இந்நாவலின் அடிப்படைக் குறையாகப் பார்க்கிறேன். அமிதவ் கோஷ் போன்றவர்கள் எழுதும் வரலாற்று நாவல்களில் எவ்வளவு அதிக பக்க அளவில் இத்தகைய ஆவணங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

நாவல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் எஸ் ராமகிருஷ்ணனின் மிகக் காட்டமான ஒரு விமர்சனம் மற்றும் ஜெயமோகனின் ஆழமும் விரிவும் கூடிய ஒரு நீண்ட விமரிசனத்தைத் தவிர வேறெந்த விமரிசனமும் பொருட்படுத்தத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு விமரிசனம் இதுவரை எழுதப்பட்டுள்ளதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நாவலுக்கு இவ்வாண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது- இந்த நிகழ்வாவது காவல் கோட்டம் பரவலாக வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வழி செய்ய வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

நன்றி : பண்புடன் இணைய இதழ்