மகாபாரதம் – பீஷ்மர் வியாசர் உரையாடல்

ஜெயமோகன் அவர்களின் மகாபாரதத் தொடர் அறிவிப்பு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் திகைப்பையும் கவலையையும் ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய ஒரு ப்ராஜெக்ட் இப்படி ஒரு முன்னறிவிப்புடன் கமிட் செய்துகொண்டு எழுத முடியுமா? இப்படி கமிட் செய்துகொள்ள வேண்டியது அவசியம்தானா? தினமும் ஒரு அத்தியாயம் 10 வருடங்களுக்கு என்றால் மற்ற படைப்புகளுக்கு நேரம் இருக்குமா? அல்லது மற்ற படைப்புகள் நின்று விடுமா? படைப்புகள் மட்டுமல்ல, ஏராளமான கேள்வி பதில்கள், விமர்சனங்கள் , எல்லாவற்றுக்கும் நேரம் உண்டா என்ற கவலைகள்  ஒரு பக்கம்.

அதுவும் வெள்ளை யானை போன்ற சமகாலத்துக்கு சற்று முந்தைய, சமகால வரலாறுகளின் அடிப்படையில்  நாவல்கள்  வருமென்று நான் எதிர்பார்த்தது நிறைவேறுமா, குறிப்பாக அசோக வனம் என்னவாகும், என்றெல்லாம்  ஆயிரம் குழப்பங்கள். மேலும் இவ்வளவு fanfare உடன் கருத்துகளையும் எதிர்வினைகளையும் விரும்பி வரவேற்று அழைத்து எழுதுவதால் வாசகர் விருப்பத்துக்கு ஏற்ப அனிச்சையாக எழுத்து வளைந்து கொடுத்துவிடாதா? விளக்கங்கள் கொடுத்தே ஓய்ந்து போகாதா? –  என்றெல்லாம் சிந்தனை ஓடியது.

இன்னொருபுறம் பர்வம்,(கன்னடம்), இனி நான் உறங்கட்டும், மற்றும் இரண்டாமிடம் (மலையாளம்) போன்ற மகாபாரதம் குறித்த படைப்புகளுக்கு இணையாக தமிழில் இல்லை என்ற எண்ணமும் அவற்றுக்கு ஈடாகச் சொல்ல ஜெயமோகனின் மகாபாரதச் சிறுகதைகள்தான் உண்டு என்ற எண்ணமும் இருந்து வந்தது. ஒருவகையில் ஜெயமோகன் மகாபாரதத்தை எழுதுவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதும் அது  just  a  matter of  timeதான் என்பதும் நான் அறிந்தே வந்திருந்தேன்.

இதெல்லாம் தொடர் ஆரம்பிக்கும்வரைதான். ஆரம்பம் முதல் இந்த 10 நாட்கள் வரை உண்மையைச் சொன்னால் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் வண்ணமே இருக்கிறது என்று கூற வேண்டும். கொற்றவையில் அடைந்த அந்த மொழியழகின் உச்சத்தை இத்தொடரில் மீண்டும் தொடுகிறார் ஜெயமோகன். அதுவும் குறிப்பாக இன்று வந்திருக்கும் பீஷ்மர்-வியாசர் சந்தித்து உரையாடும் (நான் படித்த பாரதங்களில் இல்லாத காட்சி) சிகரமாக அமைந்துள்ளது. என்ன ஒரு grandeur , என்ன ஒரு உரையாடல்- simply breathtaking . தொடர்ந்து இதே zone ல் இருக்குமானால் ஒரு பெரு விருந்துதான்.

தொடரின் வலிமைக்கு ஒரு சாட்சி  காலையில் என் மனைவியின் கேள்விகள்தான் “ஏங்க  என்னங்க ஆச்சு உங்களுக்கு? கொழந்தைங்க தண்ணி பாட்டில் பிடிச்சு வக்கறதில்ல  வெளிய விழுந்திருக்கிற பேப்பர் பால் பாக்கெட் எடுத்துட்டு வரதில்ல,  காலங்காத்தால இப்படி  நெட்லே உக்காந்துட்டு ஏந்து  வரும்போது ஏதோ பிரமை பிடிச்ச மாதிரி வர்றீங்க. அப்படி என்னதான் படிக்கிறீங்களோ!”

இன்னும் ஒரு 10 வருஷத்துக்கு இந்தக் குரல் இப்படித்தான் ஒலிக்குமோ? குழந்தைகள் நிச்சயம் பெரியவர்களாகிவிடுவார்கள். 10 வருடங்கள்!! பார்ப்போம் .